ஊடகப்பிரிவு-
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டுவதற்கான விசேட கருத்தரங்கு ஒன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG a) யினால் காத்தான்குடியில் நடாத்தப்பட்டது. NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விசேட கருத்தரங்கு காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கட்டிட கேட்போர் கூடத்தில் இன்று காலை 09.30 தொடக்கம் 12.30 வரை நடை பெற்றது.
புதிய தேர்தல் முறைகள் தொடர்பில் நிபுணத்துவ வளவாளராக செயற்பட்டுவரும் கலாநிதி சுஜாதா கமகே அவர்கள் இக்கருத்தரங்கின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு விரிவான விளக்கங்களை வழங்கினார். தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகின்ற போது சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்றப் பிரதிநிதிதுவத்தை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இக்கருத்தரங்கின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வர்த்தமானியில் அறிவித்தல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்த சட்டமூலம் எனப்படும் தேர்தல் திருத்த யோசனைகளே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்ற நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டே இந்த அமர்வில் அதிகம் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் NFGGயின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், மற்றும் தலைமைத்துவ சபை உறுப்பினரான சிராஜ் மசூர் உட்பட NFGG யின் கிழக்குப் பிராந்திய சபை உறுப்பினர்களான MACM ஜவாஹிர், AGM ஹாறூன் , MM அமீர் அலி ஆசிரியர் , MHM மிஹ்ழார் , ASM ஹில்மி ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்தோடு பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டதோடு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சிவில் சமூக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
புதிய யாப்புருவாக்க முயற்சியில் பிரதான ஒரு அம்சமாக தேர்தல் முறைமாற்றம் அமைந்திருப்பதன் காரணமாக இதுபோன்ற விழிப்பூட்டல் கருத்தரங்குகளை பல்வேறு பிரதேசங்களிலும் எதிர்வரும் காலங்களில் NFGG நடாத்தவிருப்பதாக அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.