ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் அனைவரும் எதிர்வரும் ஒருசில நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என தெரிய வருகின்றது.
இப்படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சம்பிக்க பெரேரா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவொரு படுகொலை எனவும், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்காவே தடயங்களை அழித்துவிட்டு இதனை விபத்து எனச் சோடிக்கும்படி தன்னிடம் கூறியதாகவும் சம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கார் எரியூட்டப்பட்ட இடத்திற்கு வந்திருந்த வசீமின் தந்தையை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த அநுர சேனநாயக்கா தன் முன்னால் அவரை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்திருக்கும் சம்பிக்க பெரேரா, வசீமின் தந்தை அங்கிருந்து சென்றதன் பிறகு அநுர சேனநாயக்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவிற்கு தொலைபேசியில் பேசியதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்படுகொலைச் சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரி கேப்டன் திஸ்ஸ, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஷிரந்தி ராஜபக்ஷவின் மகளிர் அமைப்புக்கு வழங்கிய டிபெண்டர் வாகனம் இப்படுகொலைச் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் வசீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சம்பிக்க பெரேரா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக தற்போது கடமையாற்றிக் கொண்டிருக்கும் அவர் நேற்று நண்பகல் குற்றத் தடுப்புப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் மாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று நீதிமன்ற விடுமுறை என்பதால் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைக்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன் பின் எதிர்வரும் வாரமளவில் பெரும்பாலும் அநுர சேனநாயக்க கைது செய்யப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கப்டன் திஸ்ஸ மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் கடைசியாகவே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
வசீம் தாஜுதீன் உபதலைவராக இருந்த ஹெவ்லொக் விளையாட்டுக் கழகத்தை உரிமையாக்கிக் கொள்வது தொடர்பான மோதலின் ஒருகட்டமாகவே அவர் தீர்த்துக் கட்டப்பட்டதாகவும், இப்படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில் நாமல் ராஜபக்ஷ செயற்பட்டிருப்பது தொடர்பிலும் அண்மைக்காலங்களில் பரவலான தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.