சுலைமான் றாபி-
க.பொ.த.(உ/த) பரீட்சையில் விஞ்ஞானப் பாடத்தில் 03 S எடுத்த மாணவர்கள் தொழில் நிமிர்த்தம் என்னை நாடி வரவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் இன்றைய தினம் (15) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரசின் ஏற்பாட்டில் நிந்தவூர் அக்சா நிறுவனம் நடாத்திய இளைஞர்களுக்கான கற்றல் திறன்விருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சிப்பட்டறையில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் :
தற்கால யுகத்தில் மாணவர்களிடையே அறிவுகள் வளர்ச்சியடைந்த நிலையில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களைத் தாங்களே சுய பரீட்சை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்கால இலட்சியங்களில் நம்பிக்கையினை வளர்த்து அதனை அடைந்து கொள்ள முடியும்.
இலங்கையில் தற்போது கல்வியானது பாரிய வளர்ச்சி மாற்றம் கண்டுள்ளது. இதில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவு, கணிதப் பிரிவுகளில் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி பெற்றவர்கள் தொழில் தேடுதலில் அக்கறை செலுத்துவதனை பின்தள்ளிட்டு தொடர்ந்தும் அந்தப் பாடங்களில் கூடுதல் அடைவு மட்டத்தினைப் பெற முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இலங்கையில் இந்த இரண்டு துறைகளிலே அதிக தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மேலும் உயர்தரப் பரீட்சையில் கலைத்துறை மற்றும் வணிகத் துறைகளில் சித்தியெய்திய சில மாணவர்கள் அரச தொழிலொன்றினை பெறும் விடயத்தில் கூடுதல் அக்கறையுடன் செயற்படுவதனை அவதானிக்க முடிகிறது.
இது தவிர தற்காலத்தில் அரசியல்வாதிகளாக இருக்கும் நாம் இளைஞர்களை திறமை மிக்கவர்களாக மாற்றுவதுதான் தற்போதைய சவாலாகும். அதற்காக வேண்டியே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீமின் பணிப்புரையின் கீழ் ஒவ்வொரு பிரதேசத்திலும் இவ்வாறான தொழில் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்க எம்மை அறிவுத்தியுள்ளார்.
எனவே இனி வரும் காலங்களில் இளைஞர் காங்கிரஸ் ஊடாக இவ்வாறான பயிற்சி நிகழ்வுகள் இடம் பெற்று மாணவர்களை உரிய தொழில் வழிகாட்டலுக்கான சிறந்த பாதையினை அடையாளப்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.
இப்பயிற்சிப்பட்டறையில் அம்பாறை ஹாடி தொழில் நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் ஏ.எல். பதுர்டீன், விரிவுரையாளர்களான எம்.வை.எம். சுஹீரா, எம்.எஸ். இஷ்ஹர் அலி ஆகியோர்கள் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விரிவுரை நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கத்தாகும்.