முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை விதியின் விளையாட்டு என உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இரண்டு தடவைகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கடமையாற்றி பயங்கரவாத தாக்குதல்களினால் ஒரு கண்ணை இழந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை நீக்கிய, மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பத்து ஆண்டுகளின் பின்னர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் விதியின் விளையாட்டாகவே கருதப்பட வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து தீர்ப்பு ஒன்றை அளித்திருந்தார்.
பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளடங்களாக ஏழு பேரே முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சரத் என் சில்வா அறிவித்திருந்தார்.
2006ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்பின் அடிப்படையில் அந்த ஆண்டு மே மாதம் 6ம் திகதி, 168 ஆக இருந்த சந்திரிக்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 7 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வரையறுக்கப்பட்டது.
இதன் ஓர் பிரதிபலிப்பாக இன்று மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.