அரசியலமைப்புச் சட்டம் மீயுயர் தன்மையுடையதாக இருக்க வேண்டுமா? அல்லது பாராளுமன்றம் மீயுயர் தன்மையுடையதாக இருக்க வேண்டுமா?
Should the constitution be supreme or Parliament be supreme?
--------------------------------------------------------
இங்கு இரண்டு சொற்கள் தொடர்பாக தெளிவு இருக்க வேண்டும்.
1.sovereignty - இறைமை
2)supremacy- மீயுயர் ( உயர்) தன்மை
நாம் கடந்த தொடர்களில் 'இறைமை' என்ற சொல்லின் அர்த்தத்தைப் பார்த்தோம் . இறைமை என்பது முழுமையான, கட்டுப்படுத்த அல்லது கேள்விக்குட்படுத்த முடியாத அதிகாரம் எனவும் பார்த்தோம் . ஆனால் மீயுயர் தன்மையடையது என்பது ஏனையவற்றைவிட உயர்வானதே தவிர முழுமையானதுமல்ல, கேள்விக்குட்படுத்த முடியாததுமல்ல.
பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மை
---------------------------------------
அரசியலமைப்புச் சட்டத்தின் மீயுயர் தன்மை தொடர்பாக பார்க்க முன் பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மை என்பது குறிப்பது என்ன? என்பது தொடர்பாக பார்ப்போம் .
பாராளுமன்றத்தின் மீயுயர்தன்மை தொடர்பாக ஆராய்கின்றபோது பாராளுமன்றங்களின் தாயாக கருதப்படுகின்ற பிரித்தானிய பாராளுமன்றத்தின் தன்மை தொடர்பாக முதலில் ஆராய்வோம்
இன்றைய நவீன உலகில் பாராளுமன்றத்தின் இறைமை தொடர்பாக பேசுவதில்லை. மாறாக மீயுயர் தன்மை தொடர்பாகவே பேசப்படுகின்றது. ஆயினும் பிரித்தானிய பாராளுமன்றத்தைப் பொறுத்த வரை இன்னும் இறைமை தொடர்பாகவே பேசப்படுகிறது .
இந்த இறைமை பாராளுமன்றத்திற்கு எவ்வாறு வந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு அப்பாராளுமன்றத்தின் வரலாற்றை சற்று பார்ப்பது பொருத்தமானதாகும் .
மன்னராட்சி
----------------
ஆரம்ப காலத்தில் பிரித்தானியாவில் எதுவித நிர்வாக கட்டமைப்புகளும் இருக்கவில்லை . மன்னர்களிடம் பெரிய இராணுவமோ பொலிசோ இருக்கவில்லை . ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தங்களது முகவர்களை வைத்திருந்தார்கள் .
Anglo- Saxon காலப்பகுதி
-------------------------------
கி.பி 410ம் ஆண்டளவில் ரோமானிய பேரரசு பிரித்தானியாவிலிருந்து வாபஸ் பெற்றதன் பின் Vortigern என்ற பிரித்தானிய ஆட்சியாளர்களில் ஒருவர் ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளின் படையெடுப்பில் இருந்தது தனது நாட்டை பாதுகாப்பதற்காக அஅழைத்ததன் பேரில் வட ஜேர்மனியின் Angles, Saxons மற்றும் Jutes போன்ற சமூகங்களில் இருந்து பிரித்தானியாவில் குடியேறியவரகளே Anglo-Saxons என அழைக்கப் பட்டார்கள்.
இவர்களே ஆங்கில தேசத்தை (English Nation) உருவாக்கியவர்களாகவும் கருதப்படுகிறார்கள் .இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் பேசப்பட்ட மொழிப்பிரிவுகளில் (dialects) இருந்து உருவானதுதான் Old English எனப்பட்டது.
பாராளுமன்றத்தின் அடித்தளம்
------------------------------------
இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் குட்டி ,குட்டி ராஜ்யங்களை அமைத்துக் கொண்டார்கள் . அவ்விராஜ்யங்களின் மன்னர்கள் மக்களின் உணர்வுகளைப் புரியாமல் அவற்றிற்கு மாற்றமாக நடந்தால் ஆட்சியின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்திருந்தார்கள். எனவே, பல்வேறு பிரதானிகளை கலந்தாலோசித்து முக்கிய சட்டங்கள், குறிப்பாக, வரிவிதிப்பு சட்டங்கள் மற்றும் பிரதான தீர்மானங்களை எடுக்கும் போது அவற்றை அமுல்படுத்துவது இலகுவாக இருக்கும். இந்த அடிப்படையில் 'witenagemot ' என்று அழைக்கப்பட்ட ஒரு சபையை ஏற்படுத்தினார்கள்.
அச்சபையின் பணி, அரசனுக்கு ஆலோசனை வழங்குவது , அரசின் (நிதி) சட்டங்கள் மற்றும் நிலப்பங்கீடுகளை அங்கீகரிப்பதாகும். இச்சபை, அரசன் அழைக்கின்றபோது மட்டும்தான் கூடியது. இச்சபை முறைமை 1066ம் ஆண்டு ' நோமாண்டிய வெற்றி ( Norman Conquest) வரை தொடர்ந்தது.
( நோமாண்டிய வெற்றி என்பது, நோமாண்டியைச் சேர்ந்த வில்லியம் என்பவரால் 1066ம் ஆண்டு பிரித்தானியா கைப்பற்றப்பட்டதைக் குறிக்கும் )
எனவே, இந்த Anglo-Saxons எனப்படுபவர்களால் ஏற்படுத்தப்பட்ட மேற்கூறப்பட்ட சபையே, பாராளுமன்றத்தின் அடித்தளம் எனக்கூறப்படுகின்றது.
Post- Norman Conquest Period
நோமாண்டிய வெற்றியின் பின்னரான பகுதி
------------------------------------------------
இக்காலப்பகுதியில் பிரபுக்களும் மதத் தலைவர்களும் சமூகத்தில் மிகவும் செல்வாக்கும் பலமும் உள்ளவர்காக இருந்தார்கள் . குறிப்பாக, நிலச்சுவாந்தர்களான பிரபுக்கள் மிகவும் செல்வந்தர்களாகவும் தமது கொத்தடிமைகளைக் கொண்ட படை பலத்தையும் கொண்டிருந்தார்கள் . அதே நேரம் கிறிஸ்தவ தேவாலயங்கள் , தமக்கென்று வேறான சட்டங்களையும் நீதிமன்றங்களையும் வைத்திருக்கும் அளவு செல்வாக்குடையவைகளாக இருந்தன. எனவே இவர்களது ஆலோசனைகளும் ஆதரவும் இல்லாமல் மன்னர்களால் ஆட்சி செய்வதென்பது மிகவும் சிரமமானதாக இருந்தது . இந்த நிலையில் நோமாண்டிய வெற்றியின் பின்னரான அரசர்கள் ' The Great Council' என்று அழைக்கப்பட்ட ஒரு சபையை உருவாக்கினார்கள் . இதில் பிரபுக்களும் ( earls and barons) மற்றும் மதத்தலைவர்களும் ( Archbishops, Bishops,Abbots) உள்ளடக்கப் பட்டார்கள். சாதாரணமானவர்கள் (Commons) இங்கு உள்ளடக்கப் படவில்லை .
இங்கு கவனிக்கப்பட வேண்டியது, Anglo-Saxons மற்றும் Normans ஆகிய இரு தரப்பாரும் வெளியில் இருந்து வந்து பிரித்தானியாவை ஆட்சி செய்தவர்கள் . எனவே உள்ளூர்த் தலைவர்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சி செய்வது சிரமமானது என்பது புரிந்துகொள்ளக் கூடியது. எனவே இந்த பின்னணியில்தான் Anglo-Saxons ஆட்சியாளர்கள் Witenagemot என்ற சபையையும் Norman ஆட்சியாளர்கள் The Great Council என்ற சபையையும் உருவாக்கினார்கள் . சிலவேளை, பிரித்தானியா இவ்வாறு வெளிச்சக்திகளால் ஆளப்படாமல் இருந்திருந்தால் இன்று இவ்வளவு அதிகாரம் உள்ள பாரளுமன்ற முறைமை சிலவேளை தோற்றம் பெறாமலே போயிருக்கலாம் .
அதே நேரம் Anglo- Saxons ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட Witenagemot இற்கும் பாராளுமன்ற முறைமைக்கும் தொடர்பு இல்லை. நோமாண்டியர்களால் உருவாக்கப்பட்ட Great Council அல்லது The Curia Regis என அழைக்கப்பட்ட அச்சபையே, பிரித்தானிய பாராளுமன்றத்தின் முதற்படி என்ற கருத்தும் இருக்கின்றது .
Magna Carta - மக்னா காட்டா
-----------------------------------
மக்னா காட்டா என்பது பிரித்தானிய மன்னர் ஜோன், இற்கும் பிரபுக்களுக்கும் (barons) இடையில் 1215 ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உலகப் பிரசித்திபெற்ற ஓர் ஒப்பந்தமாகும் . இதைப்பற்றி Lord Denning குறிப்பிடும்போது "The greatest constitutional documents of all times" அதாவது, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய மிக உயர்ந்த அரசியலமைப்புச் சட்ட ஆவணம் , என்று கூறுகின்றார். இந்த மக்னா காட்டா, 1787ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது .
அவ்வாறாயின் ' மக்னா காட்டா' என்பது என்ன?
மேல் கூறப்பட்ட Great Council என்ற சபையின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதில் சில நேரங்களில் அரசர்கள் காட்டிய அசிரத்தை, இந்த Great Council முறைமையை செயலிழக்கச் செய்தது. இதனால் பிரபுக்களின் ஒத்துழைப்பின்றி, ஆட்சியைக் கொண்டுசெல்லமுடியாத சூழ்நிலைகளை அரசர்கள் சந்திக்க வேண்டி ஏற்பட்டது.
இவ்வாறு அரசனுக்கும் Great Council ஐச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்குகளில் இரண்டு பிணக்குகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஒன்று, Thomas Becket ( Archbishop of Canterbury 1162-1170) என்ற மதத் தலைவருக்கும் Henry I I என்ற மன்னனுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு. இதில் தேவாலயத்தின் அதிகாரம் ( jurisdiction of the Church) யாருக்குக் கீழ் வரவேண்டும் ; என்பதில் இருவருக்கும் இடையிலான நீண்ட போராட்டத்தில் அம்மதகுரு கொல்லப்பட்டார் .
இரண்டாவது, 1199ம் ஆண்டு தொடக்கம் 1216ம் ஆண்டுவரை ஆட்சிசெய்த மன்னன் ஜோனிற்கும் பிரபுக்களுக்கும் இடைப்பட்ட பிணக்காகும். இப்பிணக்கின் காரணமாக, மன்னனால் ஆட்சியைக் கொண்டுசெல்ல முடியாத சூழ்நிலையில் மன்னன் கீழிறங்கி, பிரபுக்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக செய்துகொள்ளப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமே, ' மக்னா காட்டா' (Magna Carta) வாகும். இது 1215ம் ஆண்டு ஜூன்மாதம் 15ம் திகதி செய்து கொள்ளப்பட்டது .
இவ்வொப்பந்தத்தின் விசேட அம்சம் என்னவென்றால் அதன் சரத்து 61 இன் படி ( ஒப்பந்தம் மொத்தமாகத்தான் எழுதப் பட்டது, 1759ம் ஆண்டு William Blackstone என்பவரால் தான் சரத்துக்களாக பிரிக்கப் பட்டது.) மக்னா காட்டா ஒப்பந்தம் சரியாக செயற்படுத்தப் படுவதை உறுதிப்படுத்துவதற்காக 25 பிரபுக்கள் கொண்ட ஒரு சபை அமைக்கப்படும். ஒப்பந்தத்திற்கு முரணாக மன்னன் ஏதாவது செய்யுமிடத்து அவற்றைச் சுட்டிக்காட்டிய 40 நாட்களுக்குள் மன்னன் தன் தவறைத் திருத்திக் கொள்ளாவிட்டால் மன்னனின் அத்தவறு திருத்தப்படும்வரை மன்னனுக்குச் சொந்தமான அரண்மனைகள் மற்றும் காணிகள் இச்சபையினால் கைப்பற்றப்படும். இந்த 25 பேர் கொண்ட பிரபுக்கள் சபைக்கு விசுவாசமாக மக்களையும் வற்புறுத்தி சத்தியப் பிரமாணம் செய்யவைத்துக் கொண்டார்கள் .
காலத்திற்கு காலம் வந்த மன்னர்களால் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டும் மாற்றத்திற்குட்படுத்தப்பட்டும் வந்திருக்கின்றது .
இந்த ஒப்பந்தம் பிரபுக்களின் சுதந்திரம் தொடர்பாக செய்யப்பட்டதேயொழிய, சாதாரண மக்களை (commons) அது கருத்தில் கொள்ளவில்லை என்றபோதும் மன்னன் நினைத்தபடி ஆளலாம்; என்ற நிலையில் இருந்து மக்களின் சுதந்திரத்தை நோக்கி செய்யப்பட்ட (அது பிரபுக்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் ) முதலாவது ஒப்பந்தம் என்பதால் விடுதலை பெற்ற மக்களின் அடையாளமாக இவ்வொப்பந்தம் பார்க்கப் படுகின்றது.
அதே நேரம் இது அரசனின் ( தனி நபரின் ) அதிகாரம் முதல் தடவையாக ஏனையவர்களுடன் ஒரு சபையை அமைப்பதன் மூலமாக பகிரப்படுவதால் பாராளுமன்ற அதிகாரத்தின் அடிப்படையாகப் பார்க்கப்படுகிறது .
அதாவது , அரசன் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் (above the law) என்ற நிலையை மாற்றி , அரசனும் சட்டத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் கட்டுப்பட்டு, பிரதானிகளைக் கலந்தாலோசித்தே ஆட்சிசெய்ய வேண்டும், என்பதற்கு வித்திட்டது இவ்வொப்பந்தமாகும்.
( தொடரும் )