காரைதீவு நிருபர்-
கிழக்குமாகாணத்தில் நிலவும் அதிஉச்ச உஸ்ணநிலைமை காரணமாக பாடசாலைகளை 12மணியுடன் மூடுவது தொடர்பாக இன்று திங்கட்கிழமை நடைபெறும் வலயக்கல்விப்பணிப்பாளர்களுடனான கூட்டத்தின்பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு கிழக்கு கல்வியமைச்சர் சிங்காரவேலு தண்டாயுதபாணி இலங்கைத்தமிழர்ஆசிரியர் சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜாவிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
வடமத்தியமாகாணசபை அதிகவெப்பம் காரணமாக அங்குள்ள பாடசாலைகளை திங்கள் முதல் 12மணிக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியானதையடுத்து நேற்று மீண்டும் சங்கத்தலைவர் அமைச்சருடன் கலந்துரையாடினார்.
அமைச்சர் பதிலளிக்கையில்:
கடந்தவாரம் இது தொடர்பாக கலந்துரையாடினோம். பலதரப்பட்ட கருத்துக்களும் கிடைத்தன. எனினும் மாகாணக்கல்விப்பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர்களுடனான கூட்டம் திங்கள் (இன்று) திருகோணமலையில் நடைபெறவிருக்கிறது.
எனவே அக்கூட்டத்தில் அவர்களுடனும் கலந்துரையாடி கருத்துக்களைப் பெற்றபின்னர் முடிவு பற்றி அறிவிக்கலாம் எனக் கருதுகின்றேன் என்றார்.
சமகால ஆசிரியர் இடமாற்றம் பற்றிக்கேட்டபோது:
நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மே 6வரை மேன்முறையீட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதனால் பதிலீட்டுக்கு அனுப்பிய ஆசிரியர்கள் இன்னும் புதிய பாடசாலைகளுக்கு செல்லவில்லையென்பது ஒரு விடயம். எனினும் ஆசிரியர்களின் உரிமை அது.
எனவே வெகு விரைவில் மாகாண மேன்முறையீட்டு இடமாற்றசபையைக் கூட்டி துரிதமாக பதிலீடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆசிரியர்கள் நலன்களில் கவனம் செலுத்தும் ஆசிரியர் சங்கங்களும் சரி அரசியல்வாதிகளும் சரி மாணவர் நலன்களிலும் அக்கறைகாட்ட வேண்டும். கல்குடா மூதூர் மட்டு. மேற்கு வலய மாணவர்களும் எமது மாணவர்கள்தானே. அவர்களுக்கும் கற்கவேண்டும். என்றார்.