25ம் திகதி திட்டமிட்ட தொழிற்சங்க போராட்டம் நடைபெறும்; கூட்டு ஒப்பந்தம் செத்துவிட்டது - மனோ அறிவிப்பு


மார்ச் 23ம் திகதிய வர்த்தமானி பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள நிவாரணப்படியை, நாள் ஒன்றுக்கு ரூ.100/= உடன் மொத்தம் ரூ.720/= என்று தோட்ட தொழிலாளருக்கு, வழங்க தோட்ட நிறுவனங்கள் தயாரில்லை. இந்நிலையில் திட்டமிட்டப்படி 25ம் திகதி எங்கள் தொழிற்சங்க போராட்டம் நடைபெறும். அதையடுத்து எமது அடுத்தடுத்த கட்ட அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளும் தொடரும். 

இந்த போராட்டம் தொடர்பில் நமது கூட்டணியின் தொழிற்சங்க பிரிவான பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்துடன், கரங்கோர்க்க அனைத்து முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது;

நிவாரணப்படி தரும் 2016ம் வருட 4ம் இலக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள இவ்வேளையில் கூட்டு ஒப்பந்தம் அமுலில் இல்லை. ஆகவே, இல்லாத கூட்டு ஒப்பந்தம் தோட்ட தொழிலாளரை கட்டுப்படுத்தாது. எனவே ஏனைய துறையினருக்கு வழங்கப்படும் இந்த நிவாரணப்படி, தோட்ட தொழிலாளருக்கும் வழங்கப்பட்டே ஆகவேண்டும். 

இதை தருவது தோட்ட நிறுவனங்களோ அல்லது திறைசேரியோ, எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால், அது வழங்கப்பட வேண்டும் அல்லது நாங்கள் ஏற்றுக்கொள்ளும் மாற்று யோசனை முன்வைக்கப்பட வேண்டும். இப்படியே இனியும் காலம் கடத்த முடியாது. 

இதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியினதும், கூட்டு ஒப்பந்தத்தில் தொடர்பில்லாத பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தினதும் நிலைப்பாடு.

கூட்டு ஒப்பந்தம் செத்துவிட்டது. இது என்றாவது இப்படி அகால மரணம் அடையும் என எமக்கு தெரியும். இன்று இந்த செத்த பிணத்துக்கு உயிர் தரும் நோக்கம் எமக்கு இல்லை. செத்த பிணத்தை வைத்துக்கொண்டு ஒப்பாரி வைக்கும் நோக்கமும் எமக்கு இல்லை. இது செத்து தொலையட்டும். ஏனெனில் இன்றைய இந்த நெருக்கடி நிலைமைக்கு, இந்த கூட்டு ஒப்பந்தம் அடிப்படை காரணமாக அமையும் என்று எம் தொழிற்சங்க முன்னோர்கள் அப்போதே ஆரூடம் கூறி வைத்தார்கள்.

அரசாங்கத்தில் இருந்தபடி ஏன் வேலை நிறுத்தம் செய்கிறீர்கள் என்ற குதர்க்க கேள்விகளை எழுப்பும் நபர்களை மலையக மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தில் இருந்தப்படியே, இந்த நாட்டிலும், உலக நாடுகளிலும் எத்தனையோ தொழிற்சங்க போராட்டங்களை அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் நடத்தியுள்ளன. 

இனியும் நடக்கும். அரசில் பங்காளியாக இருந்தாலும் நமது கூட்டணி, நமது மக்களுக்கு விசுவாசமாக இருக்கின்றது. நமது மக்களுக்கு நாம் விசுவாசமாக இருப்பது, நமது அரசாங்கத்துக்கு தொந்தரவு நமது ஜனாதிபதியோ, பிரதமரோ கருதினால் அரசிலிருந்து எங்களை அவர்கள் விலக்கலாம். அப்படி ஒரு நிலைமை வருமானால், அதற்கு முகங்கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் என்பதை உறுதிப்பட கூறிவைக்க விரும்புகிறேன். இன்று பல தேவைகளுக்கு இந்த அரச பலத்தை நாம் பயன்படுத்துகிறோம் என்பது சிந்திப்பவர்களுக்கு புரியும். அரசாங்கத்துக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் தேவை ஏற்பட்டால், அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். 

இன்று சிலர் எடுத்த எடுப்பிலேயே அரசில் இருந்து வெளியே வாருங்கள் என்கிறார்கள். இது முதிர்ச்சியற்ற கருத்து. அதேவேளை இன்னும் சிலர் நாம் வெளியேறி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினால். அது மகிந்தவுக்கு இலாபம் என்பதை தெரிந்தே சொல்கிறார்கள். இது திட்டமிட்ட குள்ளநரிகளின் கருத்து. எப்போது போராடுவது, எப்படி போராடுவது, எதுவரை உள்ளே இருப்பது, எப்போது வெளி வருவது, எதை கேட்பது, எதுவரை கேட்டது என்பதையெல்லாம் தெரிந்துக்கொண்டுதான் தமிழ் முற்போக்கு கூட்டணி பொறுப்புடன் செயற்படுகிறது

கடந்த செப்டம்பரிலிருந்து ஆக எட்டரை மாதங்களே ஆட்சியில் இருந்து புதிய பல மாற்றங்களை கொண்டு வரும் பல்வேறு அடிப்படைகளை அமைதியாகவும், காத்திரமாகவும் சாதித்து வரும் எங்களை கேள்வி கேட்கும் இந்த சில நபர்கள் யார்? கடந்த 25 வருடங்களாக மாறி, மாறி வந்த எல்லா அமைச்சரவைகளிலும் ஊமைகளாகவே இருந்து காலத்தை கடத்திய அரசியல் தொழிற்சங்க வியாபாரிகள், நான்கு பேரைகூட கூட்டி ஒரு கூட்டம் நடத்த முடியாத காழ்ப்புணர்ச்சிகாரர்கள்,மகிந்த ராஜபக்சவுடன் இன்னமும் இரகசிய உறவு உள்ள வயிற்றுப்பிழைப்பு அரசியல்வாதிகள். 

இவர்களை நிராகரித்துவிட்டு எம்முடன் கரங்கோர்த்து போராட தயாராகுமாறு கோருகிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -