வாரியபொல கோடீஸ்வர முஸ்லிம் வியாபாரி ஒருவரிடம் கப்பம் பெறும் நோக்கில் அவரது 20 வயதுடைய மகனை இனந்தெரியாத குழுவொன்று கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் (12) இரவு இந்த கடத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாரியபொல, மல்வத்தயில் வசிக்கும் 20 வயதுடைய மொஹமட் ஆசிக் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த தினம் இரவு 8.20 மணிக்கு மிதிவண்டியில் வாரியபொல நகர் நோக்கி சென்று கொண்டிருக்கையில் வெள்ளை நிற வாகனமொன்றில் வந்த குழுவொன்று பாதையை குறுக்கிட்டு இந்த இளைஞனைக் கடத்தியுள்ளது.
பின்னர், இளைஞனின் தொலைபேசியில் வீட்டுக்குத் தொடர்புகொண்டு 2 கோடி ரூபா தருமாறு மிரட்டியுள்ளனர். வாரியபொல நகரிலுள்ள வியாபாரியொருவரின் நான்காவது மகனான ஆசிக் என்பவர் தனது பாடசாலைப் படிப்பை முடித்துக் கொண்டு தந்தையின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடத்தல் குழு கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு 3 மணி வரையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கப்பம் தருமாறு அடிக்கடி மிரட்டிக் கொண்டே இருந்துள்ளது. இந்த பணத்தொகையை தர மறுத்தால் ஆசிக்கை கொலை செய்வதாகவும் அக்குழு எச்சரித்துள்ளது.
பின்னர் குறித்த பணத்தை வழங்குவதாக ஒப்புக் கொண்டு வீட்டில் இருந்த தங்க நகைகளுடன் மூத்த சகோதரன் வாரியபொல பிரதேசத்தின் பல இடங்களுக்கும் வந்துள்ளார்.
இருப்பினும், அதனைப் பெற்றுக் கொள்ள எவரும் வருகை தராதிருந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் வாரியபொல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்தப்பட்ட இடங்களிலுள்ள சி.சி.டீ.வி. கெமராக்களையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குருநாகலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரணாந்து, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஹேஷ் சேனாரத்ன ஆகியோரும் நேரடியாக விசாரணை நடவடிக்கையில் களத்தில் இறங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நேற்று (13) மாலை வரையில் கடத்தப்பட்ட இளைஞன் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.