மனநோயாளிகள் என்பவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுபவர்கள் அல்ல - பொறியியலாளர் சிப்லி பாறுக்

M.T. ஹைதர் அலி-
மதூரில் மாத்திரம் அல்ல பரவலாக பல ஊர்களிலும் மன நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதுடன் ஒரு சில இடங்களில் இவர்கள் எவ்விதமான பராமரிப்பும் இன்றி அனாதரவாக கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் அலைந்து திரிவது மனவேதனைக்குரியதோர் விடயமாகும் என பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்தி குழுவில் அங்கம் வகிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சகோதரரால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கென ஓர் மன நோய் சிகிச்சைப் பிரிவொன்று கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அது எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுமுள்ளது. 

2016.05.03ஆந்திகதி செவ்வாய்க்கிழமை (நேற்று) காத்தான்குடி தள வைத்தியசாலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் சிப்லி பாரூக் அவர்கள் வைத்திய அத்தியட்சகரை கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று இவ்விடயம் சம்பந்தமாக ஆராயும் கூட்டம் நடைபெற்றது. இதில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், காத்தான்குடி தள வைத்தியசாலையின் மன நோய் வைத்திய நிபுணர் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியின் பிரதி நிதி என்போர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அனாதரவாக கைவிடப்பட்ட மனநிலை பாதிக்கப்படவர்களை கையாள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பான விரிவான கூட்டமொன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் சிப்லி பாரூக் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக வைத்திய அத்தியட்சகரின் தலைமையில் வைத்தியர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலாளர் , நகர சபை செயலாளர், சட்டத்துறை சார் நிபுணர்கள் மற்றும் போலீசார் ஆகியோரை உள்ளடக்கியதாக எதிர்வரும் 2016.05.06ஆந்திகதி வெள்ளிக்கிழமை விரிவான கலந்துரையாடலொன்றை நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது . 

இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்கள்...

நானறிந்த வகையில் எமதூரைச் சேர்ந்த புத்தி சுயாதீனமற்ற நால்வர் நீர் நிலைகளில் விழுந்தும், ஒருவர் புகையிரதத்தில் அடிபட்டும், ஒருவர் வீதி விபத்திலும் இறந்துள்ளனர். இதே நிலை எமது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டால் பார்த்துக் கொண்டு இருப்போமா...? இது தவிர காணாமல் போனவர்கள், வாகனத்தில் அடிபட்டு இறந்தவர்கள், தற்கொலை செய்தவர்கள் என பலரும் உண்டு. 

எல்லாவற்றுக்கும் மேலதிகமாக போதைப்பொருள் பாவனையால் மன நலம் பாதிக்கப்பட்டு வீதியில் அலைபவர்களும் எம்மத்தியில் ஏராளம் உண்டு. இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன...? என்பதற்கான விடையை நாம் காண வேண்டிய தருணம் இனியாவது ஏற்பட வேண்டும் எனவும் கூறினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -