கிழக்கு மாகாண முதலமைச்சர் மாகாணத்தினதும் சிவில் நிர்வாகத்தினதும் முதற்பிரதி நிதி - அமைச்சர் நசீர்

சப்னி-

ண்மையில் சம்பூர் தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கிழக்கு முதலமைச்சர் கடற்படை முகாம் தளபதி ஆகியோருக்கு இடையிலான நிர்வாக முரண்பாட்டினை மையப்படுத்தி இப்போது சிங்கள மொழி ஊடகங்களும் சில புல்லூருவி பதிவுகளும் வந்துகொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மாகாணத்தின் அமைச்சரவை உறுப்பினர் என்ற வகையிலும் மக்களால் சிவில் நிர்வாகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் சில விடயங்களை இங்கு முன்வைக்கின்றேன் என கிழக்கு மகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நசீர் இன்று (28) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நமது நாட்டில் புரை யோடிப் போயிருந்த இனத்துவ முரண்பாடுகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் மனங்களில் இருந்து அகற்றப்பட்டு ஒத்திசைந்து நல்லாட்சியை நோக்கிப் பயணிக்கின்றோம். இந்த நல்லாட்சியை நோக்கிய பயணத்தின் ஆரம்பத்தில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது பல்கட்சிகள் மற்றும் பல்லினங்களிற்கு இடையிலான பங்கேற்பு ஆட்சியை அமைத்து கிழக்கு மாகாணமே நல்லாட்சிக்கான உறுதிப்பாடினை பாராளுமன்றத்திற்கு அப்பாலும் கொண்டு சென்றதினை யாரும் மறக்க முடியாது.

பல்வேறு வகையான விட்டுக் கொடுப்புகளின் அடிப்படையில் முரண்பாடுகளை மிகவும் சூசகமாகக் கையாண்டு அனைத்து தரப்பினரையும் இணைத்து இன்றைய கிழக்கு மாகாண ஆட்சி முதலமைச்சரின் தலைமையில் நடைபெறுகின்றது. அத்துடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் கிழக்கு மாகாணத்தினை நோக்கி திரும்புவதையும் இந்த முதலமைச்சர் தலைமையிலான மாகாண நிர்வாகத்தின் வெற்றியாய் முழு நாடுமே அவதானிக்கின்றது. குறிப்பாய் வெளிநாட்டு பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்வதினை தங்களின் நிகழ்சி நிரல்களில் சேர்த்துக் கொண்டே வருகின்றனர். இவை இனவாதத்தினை பரப்புரை செய்து அதனாலே அப்பாவி சிங்கள மக்களை தூண்டிவிட்டு நாட்டின் இஸ்திரத்தன்மையினை கேள்விக்குட்படுத்துவோருக்கு பொறுத்துக் கொள்ள முடியாதமையாய் இருப்பதினையே அண்மைய முரண்பாடுகள் வெளிக்காட்டுகின்றன.

கல்வி அமைச்சரின் கீழுள்ள பாடசாலை ஒன்றின் விழாவில் அதுவும் கல்வி அமைச்சரின் அதே மாவட்ட நிகழ்வில் கல்வி அமைச்சர் எவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட முடியும்?. சம்பூர் மக்களின் காணிப் பிரச்சினையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட சபையும் முழுமையாய் ஈடுபட்டதன் பின் அப்பிராந்திய நிகழ்வில் கல்வி அமைச்சரும் முதலமைச்சரும் எவ்வாறு ஓரப்படுத்தப்பட முடியும்?.

அதே போல்தான், மாகாணத்தின் முதலமைச்சர் என்பவர் தனிப்பட்ட ஒரு நபர் அல்ல. கட்சி, இன வேறுபாடுகளிற்கு அப்பால் அவர் மாகாணத்தின் முதற் குடிமகனாகப் பார்க்கப்படுபவர். மாகாணத்துக்கு வெளியே நடைபெறும் ஒரு பொது நிகழ்வில் குறிப்பிட்ட மாகாண மக்களின் பிரதிநிதியாய் பங்கேற்பவர். இவ்வாறான நிகழ்வொன்றில் முதலமைச்சர் கௌரவப்படுத்தப்படாத சந்தர்ப்பம் ஏற்படுமாயின் அது மாகாணத்திற்கே கௌரவம் என்பதினை நாம் அறிவோம்.

இதே நிலை அதுவும் முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் நிகழ்வில் கலந்து கொள்ள ஆளுனரால் அழைக்கப்பட்டு மேடை ஏறும் போது கடற்படை முகாமின் தளபதியால் தடுத்து நிறுத்தப்படுவதானது ஒட்டுமொத்த மாகாணத்தின் மீதான சிவில் நிர்வாகத்தின் மீதான இராணுவத்தின் அத்துமீறலாகவே பார்க்கப்பட வேண்டும். இங்கு முஸ்லிம் சிங்கள முரண்பாட்டினை முன்னிலைப்படுத்துவது மிகப் பெரிய தவறாகும். சிவில் நிர்வாகக் கட்டமைப்பில் இத்தனை காலமும் தலையிட்டு அதனை நடாத்திக் கொண்டிருந்த இராணுவம் இன்னமும் அந்த யுத்தகால மனோ நிலையில் இருந்து விடுபடவில்லை என்பதையே இந்த நிகழ்வும் வெளிப்படுத்துகின்றது.

எந்த மக்களின் தேவைக்காக மாகாண சபை முறைமை ஏற்படுத்தப்பட்டதோ அந்த மக்கள் இன்னமும் அதிலிருந்து தங்களின் தேவைப்பாடுகளை அடைய முடியாது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சூழலில் மாகாணங்களை குறிப்பாய் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பூரண சிவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தினையும் இராணுவத்தின் தலையீடு வெளிக்காட்டி நிற்கின்றது.

இது தொடர்பாய், கிழக்கு மாகாண முதலமைச்சரின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். முப்படைகளும் எடுக்கின்ற எதேச்சதிகார முடிவுகள் நிறுத்தப்பட்டு அதிகாரம் சிவிலியன்களின் கைகளில் கொடுக்கப்படுதோடு மக்கள் ஆட்சி இன்னும் வலுவானதாய் அமைய வேண்டும். அதற்காய் நமது குரல்களையும் முயற்சிகளையும் ஒற்றுமையாய் வெளிக்கொணர்வோம். என மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -