ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு- தன்னாமுனை- புனித வளனார் மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டுபேர் 20 வயதிற்குட்பட்டோருக்கான கபடி விளையாட்டு தேசிய அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதனால் சுமார் இருநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த அப்பாடசாலைக்கு வகுப்பறைக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கென இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் உடனடியாக ஒருகோடி ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாணவர்களை உள்ளடக்கிய இலங்கை தேசிய கபடி அணி ஈரான் நாட்டில் நடைபெற்ற கபடி சுற்றுப்போட்டியில் பங்குபற்றியது.
தேசிய கபடி அணிக்குத் தெரிவாகியுள்ள மட்டக்களப்பு- தன்னாமுனை- புனித வளனார் மகா வித்தியாலயத்தின் மாணவர்களான ரசோ பென்சி மற்றும் அமிர்தலிங்கம் மோகன்ராஜ் ஆகியோரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுப் இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பாடசாலை அதிபர் மங்களச் சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா யோசப், வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ். பாஸ்கரன் உள்ளிட்ட கல்வியதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதேச பொது அமைப்புக்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்நிகழ்வின்போது வீரர்களுக்கு இராஜாங்க அமைச்சர் தனிப்பட்ட அன்பளிப்பினை வழங்கினார். மேலும் வீரர்கள் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.