ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் அனுசரனையுடன் காத்தான்குடி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்- WEDF மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களை வலுவூட்டலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலும் என்ற தலைப்பிலான நிகழ்ச்சித்திட்டத்தில் ஒரு பகுதியாக மூன்று நாள் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட தலைப்பில் தலைமைத்துவப்பயிற்ச்சியும், கணிணிப்பயிற்ச்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு மூன்றாவது கட்டமாக களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத்திட்டத்திற்கு மூவின பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மட்/ இராமகிருஸ்ன மிஷன் பாடசாலையும், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக காத்தான்குடி மட்/மம/ மீராபாலிகா வித்தியாலயமும், சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அம்/மங்களகம மங்காராம வித்தியாலயமும் கலந்து கொண்டார்கள்.
அவர்களை இணைத்து ஒரு நட்புறவான வலைப்பந்தாட்ட போட்டி ஒன்று 26.04.2016 கட்டம்பே மைதானத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எகநாயக அவர்களை பிரதம அதிதியாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், காத்தான்குடிப் பிரதேச கல்வி அதிகாரி , பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
26.04.2016 காலை மத்தியமாகாண சபையினை பார்வையிடக்கூடிய வாய்ப்பு இந்த மாணவர்களுக்கு கிடைத்தது.மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எகநாயக அவர்கள் மாணவர்கள், அதிபர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் அனைவரையும் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்று கலந்துரையாடுவதையும் புகைப்படத்தில் காணலாம்.
26.04.2016 மாலை கட்டம்பே மைதானத்தில் வலைப்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது.இப் போட்டியில் முதலாம் இடத்தை இராமகிருஸ்ன மிஷன் பாடசாலையும் இரண்டாம் இடத்தை மட்/மம/ மீராபாலிகா வித்தியாலயமும் மங்களகம மங்காராம வித்தியாலயமும் , பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எகநாயக அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறான ஒரு நிகழ்வினை ஒழுங்கு செய்தது மகிழ்ச்சியைத் தருகின்றது மூன்று இனங்களும் எவ்வித பிரச்சினையுமின்றி ஒற்றுமையுடன் இருப்பதனை நாங்கள் கண்டியில் காண்கின்றோம் அந்தவகையிலே கண்டியினை தெரிவு செய்ததனை இட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
பெண்கள் சமூகத்தில் வலுவூட்டப்பட வேண்டும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் அரசியல் ரீதியாக சமூக ரீதியாக அனைத்து உரிமை உடையவர்கள். அவர்கள் தாங்களாக முன்வந்து இவ்வாறான நிகழ்வுகளினை செய்ய வேண்டுமென்றும் இந்த அமைப்பின் நிகழ்வுகளினையும் மாணவர்களினையும் பாராட்டி நன்றியினையும் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வு பற்றி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளர் சல்மா ஹம்ஸா குறிப்பிடும் போது இவ்வாறான தலைமைத்துவப்பயிற்ச்சியும், பெண்களுக்கான வலுவூட்டலையும் பெண்களுக்கூடான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவது சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்விலே கலந்து கொண்ட முதலமைச்சர் உட்பட அனைவருக்கும் இந் நிகழ்வுக்கு அனுசரனை வழங்கிய அமெரிக்க நிறுவனத்திற்கும் அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதியாக வருகை தந்த பெர்னான்டோ ஹெர்னான்டேஸ் அவருக்கும் பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்தார்