என்னைக் கடத்திச் சென்றவர்கள் எனக்கு இரண்டு மூன்று நாட்களாக உண்பதற்கு பிஸ்கட்களை மட்டுமே தந்தனர் என வாரியபொல வர்த்தகரின் மகன் மொஹமட் ஆசிக் பொலிஸாரினால் கடத்தல்காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தான் கடத்தப்பட்டமை குறித்து அவர் விளக்கமளிக்கையில்,
அன்று 12 ஆம் திகதி இரவு. நான் கடையிலிருந்து வீடு வந்துகொண்டிருந்தேன். இதன்போது, வெள்ளை நிற கார் ஒன்று எனது அருகில் வந்து நின்றது. பின்னர் அந்தக் காரில் இருந்தவர்கள் எனது கழுத்தைப் பிடித்து காரிற்குள் ஏற்றிச் சென்றனர்.
அவர்கள் எனது கையைக் கட்டினார்கள். வாயையும் கண்ணையும் கட்டி வீடொன்றுக்குள் போட்டனர். எனக்கு அந்த வீடு பற்றி சரியாக சொல்ல முடியாது. சுமார் அரை மணி நேர பயணத்தின் பின்னரே அந்த வீட்டில் கொண்டுபோய் போட்டனர். எனக்கு பிஸ்கட்டும் குடிக்க நீரும் தந்தனர். அவ்வளவுதான்.
எனது தந்தையிடம் பணம் இருக்கின்றது தானே என என்னிடம் கடத்தல்காரர்கள் கேட்டனர். அவ்வளவு பணம் இல்லையென நான் கூறினேன். அவர்கள் அதனை நம்பவில்லை.
நீ பொய் சொல்கின்றாய் எனக் கூறி எனது வாய்க்கு அடித்தனர். எனது கையடக்கத் தொலைபேசியை எடுத்து எனது வீட்டுக்குப் பேசினர். மகன் எங்களிடம் இருக்கின்றார். பின்னர் பேசுவோம் என ஆரம்பத்தில் கூறினர். இதனையடுத்து, வீட்டிலிருந்து பணம் கேட்டு அச்சுறுத்தல் விடுத்தனர்.
கடைசி நாள் அவர்கள் பதற்றமடைந்த நிலையில் என்னை ஒரு இடத்தில் போட்டுவிட்டு சென்றார்கள். இதன்பின்னர் நான் தனியாக முன்னோக்கி வந்தேன். எனது தந்தை அந்த இடத்தில் இருந்தார். பொலிஸ் அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவர்கள் முயற்சிக்காதிருந்தால், எனக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என இன்றைய சிங்கள நாளிதழொன்றுக்க கடத்தப்பட்ட ஆசிக் தொலைபேசியில் கூறியதாக அப்பத்திரிகை அறிவித்துள்ளது.