சபாநாயகர் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை ஏற்படும் - மஹிந்த ஆதரவு அணி எச்சரிக்கை

ரிய முறையில் நிறைவேற்றப்படாத குறைநிரப்புப் பிரேரணையில் கையொப்பம் இட்டால் சபாநாயகர் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என மஹிந்த ஆதரவு அணியினர் எச்சரித்துள்ளனர்.

பிழையான முடிவினை அறிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தனது பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் மஹிந்த ஆதரவு அணியினர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நேற்று நடத்தினர்.

இதில் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, பந்துல குணவர்த்தன, ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட எம்பிக்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் கருத்துத் தெரிவித்த தினேஷ் குணவர்த்தன எம்பி கூறுகையில்,

வற் வரிச் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ள அரசாங்கம் வீணான செலவுகளுக்காக 55 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்குவதற்காக குறைநிரப்புப் பிரேரணையை முன்வைத்தனர். இதற்கு எதிராக நாம் வாக்களித்தோம். பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சபைக்குத் தலைமைதாங்கிய உறுப்பினரால் அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகள் பிழை என்பது சுட்டிக்காட்டினோம்.

முடிவு தவறு என்பது வீடியோ காட்சிகள் மூலம் ஊர்ஜிதமானது. எனவே நிறைவேற்றப்படாத நிதிப் பிரேரணையில் கையொப்பம் இட்டால் சபாநாயகருக்கு நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படும். அவ்வாறான நிலைக்கு அவர் செல்ல மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. தன்னால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கும்வரை குறித்த பிரேரணையில் கைச்சாத்திடமாட்டேன் என்ற உறுதிமொழியை சபாநாயகர் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அது மட்டுமன்றி இலங்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் மோசடி இடம்பெற்றுள்ளது என்ற செய்தி உலகளாவிய ரீதியில் பரவியுள்ளது. இதனை கேள்வியுற்று பல பாராளுமன்ற அமைப்புக்கள் எமக்கு அழைப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் இலங்கையின் நற்பெயருக்கும், பாராளுமன்ற ஜனநாயகத்துக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் வீடியோ காட்சிகளைப் பார்வையிடும்போது செயலாளர் நாயகத்துக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லையெனச் சுட்டிக்காட்டிய தினேஷ் குணவர்த்தன, சுமுகமான முறையிலேயே வீடியோ கட்சிகள் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு, தான் பிழை விட்டமையை செயலாளர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற நல்லாட்சியின் முகம்மூடி மீண்டும் ஒருமுறை கிழிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

செயலாளரை நீக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்

பிழையான வாக்கெடுப்பு முடிவை அறிவித்த பாராளுமன்ற செயலாளர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அவரை விலக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை அவருடைய பதவியிலிருந்து நீக்குவதற்கு ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்பி கூறினார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் திட்டமிட்டே பிழையான முடிவை அறிவித்தார்.

தமக்கு விருப்பமான ஒருவரை சபைக்குத் தலைமை தாங்கவைத்து சட்டங்களை நிறைவேற்றுவதாயின் ஏன் பாராளுமன்றத்தில் 225 எம்பிக்கள் இருக்கவேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். குறைநிரப்புப் பிரேரணை சபையில் விவாதிக்கப்படும் சமயத்தில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் படம்பார்க்கச் சென்றுவிட்டனர் என்றும் கூறினார்.

மோசடி வீடியோவை வெளியிட வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்ட வீடியோவை ஊடகங்களுக்கு வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது சேறு பூசுவதற்கு இடமளித்ததைப் போன்று, மோசடியான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சமயத்தில் பதிவான வீடியோ காட்சிகளையும் அரசாங்கம் வெ ளியிடவேண்டும் என பந்துல குணவர்த்தன எம்பி கோரிக்கை விடுத்தார்.

மோசடியான வாக்கெடுப்பொன்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டமை இதுவே வரலாற்றில் முதற்தடவையாகும்.

இது நாட்டின் நற்பெயருக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -