அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டராசிரியர்கள் 11 நாட்களாக சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் தமக்கு எவரும் சிறந்த தீர்வினை பெற்றுத்தரவில்லையென தெரிவித்து இன்று (04) மாலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதான கதவை மூடி சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கல்வி அமைச்சில் கடமையாற்றிய அதிகாரிகளுக்கு வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் பொலிஸரின் உதவியை நாடிய போது நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்தியதுடன் தொண்டராசிரியர்களை கதவை திறக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.
அதணையடுத்து பொலிஸாருக்கும் - தொண்டராசிரியர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
தொண்டராசிரியர்களை கதவை திறக்கும் படி பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அதணை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவிணை பெற சென்ற நேரத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவ்விடத்திற்கு வருகை தந்து கிழக்கு மாகாண அமைச்சரவையில் தாம் கலந்தாலோசித்து நிரந்தர நியமனங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் கல்வி திணைக்களத்தின் கதவினை திறந்து தமது போராட்டத்தை நிரைவு செய்தனர்.
ஆனாலும் கடமைக்கு பாதகம் விளைவித்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.