நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார்.
கிருலப்பனை போதி பௌத்த மந்திரயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் எவரும் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. அரசியலில் இருக்கும் சில தரப்பினர் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எம்மை விமர்சனம் செய்வோருடன் பகிரங்க விவாதம் நடாத்துவதற்கு நாம் தயார். நாம் இல்லாத இடங்களில் எம்மை விமர்சனம் செய்வதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. ஜனநாயகம் என்பது கூச்சலிடுவதோ அல்லது பொய்யுரைப்பதோ கிடையாது.
முடிந்தால் எம்முடன் நேருக்கு நேர் மோதிப் பாருங்கள்.
நாட்டில் கடுமையாக முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சிங்கள இளைஞர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். எனவே முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிராக நாம் குரல் கொடுக்கின்றோம்.
முஸ்லிம் அமைப்புக்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கின்றது என்பது பற்றி விசாரணை செய்யப்படுவதில்லை. சிங்களத் தலைவர்கள் அடித்துக் கொள்கின்றார்கள்.
எங்களது எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திக் கொண்டு மோதிக் கொள்வதனை தவிர்த்து சிங்களத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். நாம் ஒருபோதும் பொய்யான விடயங்களை சமூகத்திற்கு எடுத்துச் செல்லவில்லை என ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.