ஏறத்தாழ நூற்றுக்கணக்கான உற்பத்திப் பொருட்கள் அடங்கிய இலங்கையின் பிரபல்யம் வாய்ந்த ஏற்றுமதி வர்த்தக நிறுவனங்களின் வியாபார கையேடுகள், இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இக் கையேடுகள் விவசாய உற்பத்திப்பொருட்கள் தொடக்கம் கைத்தொழில் உற்பத்திப்பொருட்கள், பசுமை உற்பத்திப்பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையானது காட்சிப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் கையேடுகளினை இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு பூரண அனுசரணையினை வழங்கியிருந்ததுடன் அதிகளவிலான வர்த்தகத்தில் ஈடுபடும் அங்கத்தவர்களினைக் கொண்ட 'ஜோர்தான் வர்த்தக சங்கம்' தனது ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கது.
ஜோர்தான் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. நாயல் ராஜா அல் கபிறிற்றி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்குபற்றியிருந்தார். அவர் தனது ஆரம்ப உரையில் ஜோர்தான் நாட்டின் வியாபார பங்காளி நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டதுடன் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளினை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதன் முதற்கட்டமாக தனது தலைமையின் கீழ் ஜோர்தான் வர்த்தகர்களினை உள்ளடக்கிய குழு இலங்கைக்கான வர்த்தக சுற்றுலாவினை ஜூலை மாத முற்பகுதியில் மேற்கொள்ளவிருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார். இக்காலப்பகுதியில் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார வாத்தக உடன்படிக்கையினை கைச்சாத்திடும் திட்டம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் கௌரவ ஏ.எல்.எம் லாபீர் அவர்கள் நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், ஜோர்தான் வர்த்தகர்களுக்கு பல்வேறு வகையான பொருட்கள், சேவைகளினை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்துகொள்வதற்கான சாதகமான சூழல் காணப்படுவதோடு;, இலங்கையின் இறக்குமதி பொருட்களினை மீள் ஏற்றுமதி செய்து கொள்வதற்கான ஒரு சிறந்த வழிப்பாதையாகவும் ஜோர்தான் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கிடையிலான வருடாந்த வர்த்தக நிலுவை ஏறத்தாழ 50 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்கையில் கிட்டத்தட்ட 36 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பக்கற் செய்யப்பட்ட தேயிலையினை இலங்கை ஜோர்தானுக்கு ஏற்;றுமதி செய்கின்றது,
இலங்கையின் பல்வேறுபட்ட உற்பத்திப் பொருட்களுக்கு ஜோர்தானில் சிறந்த சந்தை வாய்ப்பு காணப்படுகின்றது. பக்கற் செய்யப்பட்ட தேயிலை தவிர பொதி செய்யப்படாத தேயிலை, தெங்கு உற்பத்திப் பொருட்கள், பசுமை உற்பத்திப் பொருட்கள், ஆயுர்வேத உற்பத்திப் பொருட்கள், மூலிகை அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றிற்கு உயர்ந்த கேள்வி நிலவுகின்றது.
ஜோர்தான் வளைகுடா, ஆபிரிக்கா மற்றும் அதன் பிராந்திய நாடுகள் உட்பட ஐரோப்பிய சமூகம், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுடன் பல்வேறு வகைப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இங்கு குறி;ப்பிடத்தக்கது.
இந் நிகழ்வானது நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் பிரசன்னத்தின் மத்தியில் இலங்கைத் தூதுவர் மற்றும் ஜோர்தான் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஆகியோர்களினால் நாடா வெட்டி வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இலங்கை வர்த்தக கம்பனிகளின் பிரமுகர்களின் நேரடி வருகையின்றி வினைத்திறனுடன் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வானது, அவர்களின் பணச் செலவு மற்றும் நேர விரயத்தினை தவிர்க்கக் கூடிய வகையில் அமைந்திருந்தமை முக்கிய அம்சமாகும்.
தகவல் -நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்-