முசலி பிரதேச செயலக பிரிவில் அமைகின்ற மரிச்சிகட்டி, பாலக்குழி, உனைஸ் நகர் போன்ற கிராமங்களில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கும் சிலாவத்துறை மக்களுக்கும் மூன்று நிரந்தர வீடுகளும் 05 குடிநீர் வினியோகத் திட்டங்களும் கையளிக்கும் நிகழ்வு 4ம் திகதி புதன் கிழமை காலை 11:00 தொடக்கம் பிற்பகல் வரை நடைபெற்றது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடிநீர் வினியோக அமைப்பிலிருந்து அதனைச் சுற்றியுள்ள 12-15 குடும்பங்களைச் சேர்ந்த 75 இற்கும் மேற்பட்ட பயனாளிகள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வர்.
அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் சார்பில் நிகழ்வில் பங்கேற்ற ஹஷரத் கலீல் அவர்கள் தனது உரையில் 'முஸ்லிம் எய்ட் எதிர்பார்த்ததையும் விட சிறப்பாக வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்துள்ளது. நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டபோது, தமது பிரத்தியேக நிதியில் இருந்து நிதியை இதற்கு செலவிட்டு, பொறுப்புடன் இவ் வீட்டுத்திட்டதை நிறைவு செய்தமை பாராட்டத்தக்கது. மேலும் கருத்திட்ட நிர்வாகச் செலவு எதனையும் முஸ்லிம் எய்ட் இத்திட்டத்திலிருந்து எடுக்கவில்லை' என்றார்.
நீர் வினியோகத் திட்டத்தை மக்களிடம் கையளிப்புச் செய்த வைபவத்தில் உரையாற்றிய முஸ்லிம் எய்ட் பணிப்பாளர் பைசர் கான்,
மன்னார் மாவட்டத்திலேயே நீர் தேவை அதிக உள்ள மரிச்சிகட்டி போன்ற கிராமங்களுக்கு இந் நீர் வினியோகத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதற்குரிய வகையில் பொறுப்பாக நீர்வினியோகக் கட்டமைப்பினை மக்கள் பயன்படுத்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
அடுத்து வரும் வரட்சியான மாதத்தில் ரமழான் நோன்பு காலம் வரவுள்ளதனால், மேற்படி குடிநீர் வினியோகத் திட்டம் மிகச் சிறந்த வரப்பிரசாதம் என சமூகத்தலைவர்கள் தமது திருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வுகளில் உலமாக்கள், சமூகத்தலைவர்களுடன், முஸ்லிம் எய்ட் பணிப்பாளர், ஊழியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.
2010 ஆண்டு தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறி மக்களுக்கு நிரந்தர வதிவிடம், பாலர் பாடசாலை, கிராமிய வைத்தியசாலை புனரமைப்பு, வாழ்வாதாரம், வெள்ள நிவாரணம், அநாதரவான சிறார் பராமரிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை முஸ்லிம் எய்ட் தொடர்ச்சியான முன்னெடுத்துள்ளது.