எம்.வை.அமீர் -
நாட்டில் யுத்தம் ஒழிக்கப்பட்டு, மக்களை மக்களே ஆளும் நிலை உருவாகிவரும் இன்றைய நிலையில், அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கிழக்கின் முதன்மகன் அவமானப்படுத்தப்பட்டுள்ளமையானது, மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசுவழங்கும் அந்தஸ்த்தில், சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இப்பிரதேசங்கள் இருக்கின்றதா? என எண்ணத் தோன்றுவதாகவும் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
2016-05-28 ஆம் திகதி ஆயுர்வேத மருந்தகம் ஒன்றை சாய்ந்தமருதில் திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய நல்லாட்சியில் நல்லவையே அரங்கேறிவரும் இப்போதைய சூழலில், நல்லாட்சிக்கு துணைபுரிந்த சிறுபான்மை இன மக்கள் பிரதிநிதிகளின் தலைவர், வயிற்றைப் பிடித்து நிறுத்தப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இவ்வாறான நிலைப்பாடு ஏனைய சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக தான் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்றபோது ஆளுனரும், கல்வி அமைச்சரும் ஸ்தலத்தில் இருந்து சாட்சியாளர்களாக இருந்தபோதும் உண்மை என்னவென்று புரிந்துகொள்ளாமல், சில சிங்கள ஊடகங்கள் பழிமுழுவதையும் முதலமைச்சரை நோக்கி வீசுவதாகவும், இன்னும் சில சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள் தவறான கருத்துக்களை பரப்பிவருவதாகவும், இன்னும் சில போராட்டங்களை நடத்தியுள்ளதாகவும், இவ்வாறானதொரு நிலை ஆரோக்கியமானாதாக இல்லை என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஹாபீஸ் நஸீருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது, தனியொரு ஹாபீஸ் நஸீருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக பார்க்கப்படவேண்டிய ஒன்றல்ல என்று தெரிவித்த அமைச்சர் நஸீர், சிறுபான்மையின ஒவ்வொரு மகனுக்கு எதிராகவும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக நோக்கவேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலை மட்டத்துக்கு தரமுயர்த்தித் தர தன்னால் முடிந்த சகல நடவடிக்கைகளை எடுப்பதாகவும், சாய்ந்தமருது வைத்தியசாலையை ஆதாரவைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான பணிகளை செயற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.