ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தான் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை பெற்றுத்தர முடியும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.ஐ.எம். பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
கடந்த 04ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற செயலகத்தில் இடம்பெற்ற உயர்பீட உறுப்பினர்களுடனான சந்திப்பில் தானும் கலந்து கொண்டேன்.
இதன்போது சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி விடயம் சம்பந்தமாக குறிப்பிடும்போது; நுவரெலியா மாவட்டத்தில் ஒரு உள்ளுராட்சி மன்றமும் அதனுடன் இணைந்தால் போல் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையும் விரைவில் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தப்பட இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன் இதில் எதுவித சந்தேகமும் தேவை இல்லை எனவும் தெரிவித்த அவர், நகர அபிவிருத்தித் திட்டத்தில் சாய்ந்தமருதுக்கே கூடிய பங்கு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு பாரிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று போடப்பட்டுக் கொண்டிருக்கும்போது கடந்த பொதுத் தேர்தலில் கோடான கோடிகளைக் கொட்டியும் சாய்ந்தமருது பிரதேசத்தில் சாய்ந்தமருது பிரதேச சபை என்ற கோசத்தை முன்வைப்பதன் மூலம்தான் வாக்குகளைப் பெறலாம் என்று தற்போது ACMC பிரதித் தலைவர் என்று அழைத்துக் கொள்ளும் இவர் இன்னும் தேர்தல் ஆணையாளரால் ஏற்றுக் கொள்ளப்படாத பிரதித் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களும் அவரது பாணியில் அவரது பக்தர்களும் சத்தியாக்கிரகம் இருக்கப் போவதாக அறிக்கை விடுவது பகிடிக்கிடமாக உள்ளது.
இதில் என்ன புதிர் என்றால் முஸ்லிம் காங்கிரஸிற்கு நிகராக ACMCஅமைச்சரவையிலும், அரசிலும் பங்காளிகளாக இருந்து கொண்ட நிலையில் சத்தியாக்கிரகம் இருப்பதாகக் கூறுவது அவர்களது இயலாமையின் வெளிப்பாடாகும்.
ACMC தலைமையினால் இது தொடர்பாக இதுவரை மௌன விரதம் தொடரும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் செய்யாததை நாங்கள் செய்வோம் என்று சத்தியாக்கிரகம் இருக்கப் போனால் மஹிந்தவின் தரப்போடு சேர்ந்துதான் சத்தியாக்கிரகம் இருப்பது நலம்.
முஸ்லிம் காங்கிரஸ்தான் சாய்ந்தமருதுக்கான பிரதேச செயலகத்தைப் பெற்றுக் கொடுத்தது. இதற்கு யாரும் உரிமை கோர முடியாது. அது போல் இந்த நாட்டின் அதி உத்தம பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமஷிங்க அவரது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எமக்கு இது விடயமாக வாக்குறுதி தந்திருக்கின்றார். வெகு விரைவில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையும் மலர இருக்கின்றது.
இதற்கு, தான் மேற்கொண்ட சத்தியாக்கிரகப் போராட்டமே வழி வகுத்தது என்று ஊரார் கோழி அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதத் தயார் ஆகி விட்டார் போலும். ஏனெனில் அவருக்கு இது கைவந்த கலை.
மாபெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் அமைத்த தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தை தான் அமைத்ததாக உரிமை கோரும் ஏ.எம்.ஜெமீலுக்கு இது ஒரு பெரிய விடயமாகத் தெரியப்போவது இல்லை.
சகோதரர் ஜெமீல் அவர்களே, சாய்ந்தமருதில் பெரும்பாலான வீதிகள் திருத்தப்பட்டு விட்டன. ஆனால் அம்பாறை மாவட்ட ACMC காரியாலயம் அமைக்கப்பட்ட வீதி. உங்களின் தலையீட்டினால் இதுவரை போடப்படாமல் இருக்கின்றது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த வீதியை உங்கள் ACMC இனால் அல்லது நீங்கள் மாகாணசபை உறுப்பினராக இருக்கும் போது போட முடியவில்லை. அவ்வீதியைப் போடுவதற்கு நீங்கள் தடையாக இருக்காமல் இருந்தால் போதும் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.