இரணைமடு நீர்த்திட்டம் குறித்து அமைச்சர் ஹக்கீமின் நிலைப்பாடு சிறந்ததொரு வழிகாட்டல் - டக்ளஸ்

பாறுக் ஷிஹான்-
சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்க் கசிவு கலந்துள்ளது உறுதியாகியுள்ளமையினால் அந்த நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல. எனவே கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லப்படுவது தவிர்க்கப்பட முடியாதது என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளமை நாம் ஏற்கனவே எடுத்திருந்த நிலைப்பாட்டினை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வட மாகாண குடிநீர்த்திட்டம் குறித்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆராயப்பட்ட நிலையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லப்படுவது தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகும். கடந்த காலங்களில் இத்திட்டத்தை புலிகளும் ஏற்றுக்கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டிருந்தனர். ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தபோது அதனை தமது சுயநல அரசியலுக்காக சில தமிழ் அரசியல் கட்சித்தலைமைகள் தடுத்துநிறுத்தியிருந்தனர்.

ஆனாலும் தற்போது மீண்டும் இத்திட்டத்தை தொடரவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் குறித்த தீர்மானங்கள் எடுக்கின்றபோது கிளிநொச்சி விவசாயிகளின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து அவர்களது தேவைக்கு அதிகமான நீரை மட்டும் பூநகரி மற்றும் பளை பச்சிலைப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு வழங்கி அங்கிருந்து யாழ்.குடாநாடு நோக்கியும் கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்.

யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுவிலிருந்து நீரை கொண்டு செல்வதை தவிர்க்க முடியாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியிருப்பது நாம் ஏற்கனவே எடுத்திருந்த நிலைப்பாடு சரியானது என்றும், நாம் தீர்க்கதரிசனத்துடன் எடுக்கும் முடிவுகள்யாவும் சரியானவையே என்பதையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் திட்டத்திற்கு மாற்றுத் திட்டங்கள் இருக்கின்ற போதும் அவை உடனடி சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை என்பதுடன் அவை உற்பத்தி மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக செலவுகள் அதிகரித்தவையாக அமையும். ஆகவே இரணைமடுவிலிருந்து மேலதிக நீரை யாழ் நோக்கி கொண்டுசெல்லப்படும் திட்டம் குறித்து அசௌகரியங்கள் ஏதாவது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படுமேயானால் முன்கூட்டியே அவர்களுக்கான காப்பீடு தொடர்பிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

அத்துடன் குடாநாட்டிலுள்ள மலசலகூடங்கள் குழிகளை கொண்டனவாக அமைக்கப்படுவதனால் நிலத்தடி நீரில் மலத்தொற்று அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதை தடுப்பதற்கு கழிவுநீர் வடிகால் தாங்கி அமைத்து அதனூடாக மலக்கழிவுகளை சேகரித்து மீள் சுழற்சிக்குட்படுத்தவதன் மூலம் நிலத்தடி நீருடன் கலக்காது பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் 2006 ஆம் ஆண்டிலிருந்தே இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் சர்ச்சைக்குரியதாகி வருகிறது. குடிநீர் பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினை. இதில் அரசியலை கலப்பது நியாயமற்றது.

இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விவசாயிகளுக்கான நிலவளங்களை பாதுகாப்பதோடு எமது மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வுகாண அனைத்து தமிழ்பேசும் கட்சித் தலைமைகளும் உண்மையுள்ளவர்களாக உழைக்க முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -