சேனையூர் நவா-
அக்கரைப்பற்று மகாசக்தி நிறுவனத்தின் பரிபாலனையின் கீழ் இயங்குகின்ற 07 முன்பள்ளி பாடசாலைகளின் ஆக்கத்திறனை வெளிக்கொனரும் முகமாக 2016.05.12ம் திகதி வியாழக்கிழமையான இன்று அதன் கௌரவ தலைவியும், ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபைத்தலைவியுமான திருமதி: துளசிமணி மனோகரராசா தலைமையில் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சியும்- சிறுவர் சந்தையும் மகாசக்தி கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மகாசக்தி நிறுவனத்தின் பரிபாலனையின் கீழ் இயங்குகின்ற வாச்சிக்குடா பாலர் பாடசாலை, நாவற்குடா பாலர் பாடசாலை, டயகோணியா பாலர் பாடசாலை, கோளாவில் பாலர் பாடசாலை, பனங்காடு பாலர் பாடசாலை, கண்ணகிபுரம் பாலர்பாடசாலை மற்றும் மகாசக்தி கிராமம் பாலர் பாடசாலை ஆகிய 07 பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் பொருட்களும், கைவண்ணங்களும், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இயற்கை விவசாய உற்பத்திப் பொருட்கள், பலசரக்கு பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உள்ளுர் ஏனைய உற்பத்திகள் என பல விதப்பொருட்களும்- ஆடைகளும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையையும், ஆக்கத்திறன் மேம்பாட்டையும் விருத்தி சுய முயற்சியை ஊக்கப்படுத்துகின்ற வகையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதாக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.