காரைதீவு நிருபர் சகா
காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட அவசர சிகிச்சைப்பிரிவு ஒருமாதம்கடந்தும் இன்றுவரை மூடப்பட்டுக்காணப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி திறந்துவைக்கப்பட்ட அவசர சிகிச்சைப்பிரிவு திறப்புவிழா முடிந்தகையோடு இழுத்துமூடப்பட்டது.இது காரைதீவு மக்கள் மத்தியில் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய அவசர சிகிச்சைப்பிரிவுக் கட்டடம் கிழக்கு மாகாண சுகாதார சுதேசிய அமைச்சர் எ.எல்.எம். நசீரினால் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.. மாவட்ட வைத்தியஅதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின் தலைமையிலிடம்பெற்ற திறப்புவிழாவில் கிழக்குமாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வைத்தியசாலைக்குப் பொறுப்பான மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பினிடம் கேட்டபோது: அவசரசிகிச்சைப்பிரிவுக் கட்டடம் மூடப்பட்டுக்கிடப்பது உண்மைதான். ஏனெனில் அதற்கான புதிய உபகரணங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அவற்றை ஒரு அமைப்பு தருவதாகக்கூறியுள்ளது.அல்லது சுகாதாரத்திணைக்களம் தரும்பட்சத்தில் இப்பிரிவை திறக்கலாம்.
எனினும் அவசரசிகிச்சை செயற்பாடுகள் வழமைபோல பழையஇடத்தில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.வருகின்ற நோயாளிகளுக்கு அங்கு நல்ல சிகிச்சை வழங்கப்பட்டுவருகின்றது. புதிய உபகரணங்கள் கிடைக்கும் பட்சத்தில் புதியகட்டடத்தில் இப்பிரிவை இயக்கமுடியும். இப்பிரிவிலிருந்து விடுதிகளுக்கு நோயாளிகளைக் கொண்டுசெல்ல மூடிய பாதையமைப்பிற்காக சுகாதாரத்திணைக்களத்தால் ஒதுக்கப்பட்ட நிதிகிடைத்ததும் அதனையும் பூர்த்திசெய்யலாம். என்றார்.
வைத்தியசாலை அபிவிருத்திச்சபையின் முன்னாள் உபதலைவரும் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளருமான வீ.கிருஸ்ணமூர்த்தி கருத்துரைக்கையில்:
அவசரஅவசரமாக இக்கட்டடம் ஒருசிலருக்கு மாத்திரம்அறிவித்து திறந்துவைக்கப்படும்போதே ஏதோ ஒரு வில்லங்கம் இருக்குமென நினைத்தோம். அது சரியாகப்போய்விட்டது. உரிய உபகரணங்கள் இல்லாமல் வெறும் கட்டடத்தை ஏன் திறந்தார்கள்? என்ற கேள்வியைக் கேட்கவிரும்புகின்றேன்.அப்படி என்ன அவசரம்?
அருகிலுள்ள வைத்தியசாலைகள் இரவோடிரவாக தரமுயர்த்தப்பட்டுக் கொண்டு போகின்ற காலகட்டத்தில் இப்படி ஒரு ஏமாற்று வேலையை காரைதீவு மக்களுக்கு செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ்மக்களை பெரும்பான்மையாகக்கொண்ட காரைதீவின் வைத்தியசாலை அசவரசிகிச்சைப் பிரிவின் திறப்புவிழாவிற்கு ஒரேயொருதமிழ் எம்.பி. கோடீஸ்வரன் அழைக்கப்படவில்லை.அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த இரண்டு தமிழ் மாகாணசபை உறுப்பினர்களும் அழைக்கப்படவில்லை. இது நியாயமா?
நாம் வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களாக இருந்தகாலகட்டத்தில் இப்படியான ஓரநீதியான செயற்பாடுகளுக்கு இடமளிக்கவில்லை.என்றார்.