ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நூறாவது ஆண்டு நிறைவையொட்டி பழைய மாணவர்களால் பாடசாலையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் ஒன்று மாளிகாவத்தை செரண்டிப் ஹோட்டலில் நேற்று முன்தினம் (01) பாடசாலையின் அதிபர் நபீல் றபாய்டீனின் தலைமையில் இடம் பெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இன்பாஸ் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்களான ஆசிரியர் ஷாலின் கலீம், அல்-ஹக்கீம் பாடசாலையின் அதிபர் திருமதி மர்ழியா, சமுக சேவையாளர் சாமசிறி எம்.எம்.நிஷார், பாடசாலையின் உதைபந்தாட்டக் குழுக்களுக்கு உதவி வரும் எம்.யு.எம். அஸ்மி, பாடசாலையின் ரகர் கழகத்திற்கு உதவி வரும் நாசிம் கபூர் ஆகியோர் நினைவுச் சின்னங்கள் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பாடசாலைக்கு இலங்கை கிரிகட் அணியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பெயர் குறித்து ஒப்பமிடப்பட்ட துடுப்பாட்ட மட்டையை பாடசாலையின் கட்டிட அபிவிருத்திக்காக ஏலத்தில் விடயப்பட்டபோது அதனை பிரபல வர்த்தகர் றியாஸ் இஸ்மாயில் சுமார் முப்பது இலட்சத்திற்கு பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாடசாலையின் சகல பழைய மாணவர்கள், புத்தி ஜீவிகள், ஆசிரியர்கள், பாடசாலைக்கு உதவிகள் நல்கி வரும் நலன் விரும்பிகள், உலக மேமன் சங்க தலைவர் முஹமட் சலீம், மேமன் சங்க சங்கானி, செரண்டிப் பாடசாலையின் அபிவிருத்தி சங்க இணைத் தலைவர் அபளசுல் ஹமீட், புரவலர் ஹாசிம் உமர், மேமன் சங்க உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பாடசாலையின் தற்போதைய நிலை பற்றிய கானொலியும் காண்பிக்கப்பட்டதுடன் மிகவும் வறிய மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையின் அபிவிருத்திக்கு நல் உள்ளங் கொண்டவர்களின் உதவிகளும் கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.