சுஐப் எம் காசிம்-
மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களக் கிராமங்களுக்கும் அமைச்சர் ரிஷாட் வீடுகளைக் கட்டி வழங்கி வருகிறார். அமைச்சர் ரிஷாட்டின் சொந்த முயற்சியினால் அரசினதோ, மீள்குடியேற்ற அமைச்சினதோ எந்த உதவியுமின்றி வெளிநாடு, உள்நாட்டு பரோபகாரிகளினதும் செல்வந்தர்களினதும் நிதியுதவியுடன் இந்த வீட்டுத் திட்டங்களை அமைத்து வருவதோடு நீர், மின்சாரம், பாதை உட்கட்டமைப்பு, பணிகளுக்கும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் போரின் உக்கிர விளைவினால் பாதுகாப்பு என்ற போர்வையில் முற்றுமுழுதாக விழுங்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் வாழும் முள்ளிக்குள கிராம மக்கள் அதிலிருந்து வெளியேறி சுமார் இரண்டு மைல் தூரத்தே உள்ள இன்னுமொரு பிரதேசத்தில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு இற்றை வரை வீட்டு வசதிகளோ பாதை வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை.
அத்துடன் புதர்கள் நிறைந்த இந்தப் பிரதேசத்தில் மின்சார வசதிகளும் இல்லை. குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ நீர்த்தட்டுப்பாடு. இவ்வாறான கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்த இந்த கிராம மக்களை பார்வையிட அமைச்சர் ரிஷாட் முதன்முறையாக அந்த பகுதிக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்தார்.
மன்னார் மாவட்ட பாதிரிமார்களினதும் முள்ளிக்குள பாதிரியினதும் அழைப்பின் பேரிலே அங்கு சென்ற அமைச்சர் ரிஷாட் மக்கள் படும் கஷ்டங்களை நேரில் கண்டறிந்தார்.
தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குகளைப் பெறுவதற்காக தங்களை நாடி அரசியல்வாதிகள் வருவதாக கவலை தெரிவித்த அவர்கள், அமைச்சர் ரிஷாட்டிடம் தமக்கு விமோசனம் பெற்றுத்தருமாறு வேண்டினர்.
இதன் அடிப்படையிலேயே தற்போது அந்தக் கிராமத்தில் பதினாறு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை எடுத்தார். வீட்டு நிர்மாணப்பணிகள் தற்போது முடிவடையும் தறுவாயில் உள்ளன.
அத்துடன் நீர்ப்பற்றாக்குறையை தீர்க்க தற்காலிக தீர்வொன்றைப் பெற்றுக்கொடுத்த அமைச்சர் நிரந்தரத் தீர்வு ஒன்று தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார், மற்றும் மின்சாரம், பாதைப் போக்குவரத்து பிள்ளைகளின் கல்வி தொடர்பிலும் அமைச்சர் ரிஷாட் ஆவன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதே வேளை, அமைச்சர் ரிஷாட் கொண்டச்சி – சிலாவத்துறை பிரதேசங்களுக்கு அணித்தான ”சிங்கள கம்மான” என்ற சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்திற்கு சென்ற போது கட்டாந்தரையில் மக்கள் படும் அவதிகளை கண்டறிந்தார்.
தகிக்கும் கொடூர வெயிலில் சிறிய கொட்டில்களில் வாழும் அவர்கள் நீரின்றி படும் அவலங்களையும் மின்சாரமின்றி படும் கஷ்டங்களையும் அமைச்சரிடம் எடுத்துரைத்த போது இந்த மக்களுக்கு விடிவைப்பெற்றுத்தருவதாக அவர் அப்போது உறுதியளித்தார். இந்தப் பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கு பதினாறு வீடுகளை அமைச்சர் ரிஷாட் நிர்மாணித்து வருகிறார்.
அத்துடன் மின்சார இணைப்புக்களும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தற்காலிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் மீண்டும் இந்த சிங்கள – தமிழ் கிராமங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட்டை மக்கள் நன்றிப் பெருக்குடன் நோக்கினர். அமைச்சர் செய்த உதவிகளுக்கு தமது நன்றிகளை வெளிப்படுத்தினர்.