றபீக் பிர்தௌஸ்-
அம்பாரை மாவட்ட சர்வமதத் தலைவர்களுக்கான மாநாடு நிந்தவூர் மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் அல்ஹாஜ்.ஏ.எம்.றஸீன் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் அம்பாரைப் பிராந்திய மூன்றாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிறிகேடியர் ஹரன் பெரேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இம்மாநாட்டில் கல்முனை சுபத்திரா ராமய விஹாராதிபதி ரண்முத்துகல தேரர், அக்கரைப்பற்று விஹாராதிபதி தேவபொட்ட சோரத் தேரர், திருக்கோயில் கத்தோலிக்க தேவாலய அருட்தந்தை இக்னோசியஸ், கல்முனை முருகன் கோயில் பிரதம குரு சிவசிறி. க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், நிந்தவூர் தஃவா கலாசாலை அதிபர் சங்கைக்குரிய உலமா எம்.ஏ.அமீர் அலி மௌலவி, கல்முனை சமாதானப் பேரவைத் தலைவர் கலாநிதி. எம்.ஐ.எம்.ஜெமீல், படைப்பிரிவின் பொது மக்கள் தொடர்பதிகாரிகளான கேணல் சரத் தென்னக்கோன், கேணல் வசந்த ஹேரத், கேணல்.பிரியந்த கமகே, மேஜர் நவரெட்ணம் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அம்பாரைப் பிராந்திய கட்டளைத்தளபதி பிறிகேடியர் ஹரன் பெரேரா 'நாட்டின் ஆங்காங்கே நடைபெறும் ஒரு சில விரும்பத்தகாத செயல்களை வைத்துக் கொண்டு நாம் பிழையாகச் சிந்திக்கக் கூடாது.
நமது அம்பாரை மாவட்டத்தில் நாம் அமைதியைக் காத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் முழு நாடும் சீர் பெறும். எனவே இங்கு கூடியிருக்கும் மும்மதத் தலைவர்களிடம் நான் பணிவாக வேண்டுவது, நமது அம்பாரைப் பிராந்தியத்தில் சாந்தி, சமாதானம் ஓங்க அவரவர் சமூகத்தவர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்.' ஏனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், இங்கு உரையாற்றிய அக்கரைப்பற்று விஹாராதிபதி தேவபொட்ட சோரத் தேரர்,
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை மிகச் சிறந்தது. ஆபாச உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடையாகும். எங்கள் சமூகப் பெண்களின் ஆடைகள் கூட ஆபாசத்தை உண்டு பண்ணும் விதத்தில் அமைந்துள்ளன.
எல்லாச் சமூகங்களிலும் குழப்பங்களை உண்டு பண்ணக்கூடிய சிறு சிறு குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. நேர்மையில்லாத குழப்பவாதிகளான அவர்கள் அழிந்து விடுவர்.
இதற்காக நாம் சமாதானத்தைக் காப்பதிலிருந்து விலகி நிற்கக் கூடாது' எனக் கேட்டுக் கொண்டார்.