அதற்காக அவர் விகாரைகள் தோறும் சென்று தேரர்களை தூண் டும் வகையில் செயற்படுகிறார். மஹிந்தவின் தந்தை உயிர்ப்பித்து எழுந்தாலும் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
யுத்தகாலத்தில் டொய் போலால் கூட புலிகள் தாக்குதல் நடத்தாத மஹிந்தவுக்கு 200பேர் கொண்ட பொலிஸ் பாதுகாப்பு போதாதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்றுமுன்தினம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாட்டை 11வருடங்கள் ஆட்சி செய்த மஹிந்த ராஜபக் ஷ நாட்டில் செய்யவேண்டிய அனைத்தையும் செய்து முடித்தார். புலிகளின் குண்டுத்தாக்குதலில் ஒரு கண்ணை இழந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த 60 பேர் கொண்ட பாதுகாப்பு படையை நீதிமன்றம் சென்று 30ஆகக் குறைத்தார்.
அதேபோன்று யுத்தகளத்தில் இராணுவ தளபதியாக இருந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த சரத் பொன்சேகாவை சிறையிலடைத்து படாத பாடுபடுத்தினார். ஆனால் இன்று பீல் மாஷல் பதவி வகிக்கும் அவருக்கு 15பேர் கொண்ட பொலிஸ் பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் யுத்தம் இடம்பெறும்போது சிறிய டொய் போலால் கூட புலிகள் தாக்குதல் நடத்த முற்படாத மஹிந்த ராஜபக் ஷ வுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என கோரி அவரின் கையாட்கள் பாராளுமன்றத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டு நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
மஹிந்தவுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கோருவதன் மூலம் இராணுவத்தை வைத்துக்கொண்டு ஆட்சியை கைப்பற்றும் சதி நடவடிக்கையில் ஈடுபடுவதே இவர்களின் நோக்கமாகும். இதற்காகத்தான் ஒவ்வொரு நாளும் விகாரைகளுக்கு சென்று தேரர்களை தூண்டிவருகிறார். அவர் என்ன தான் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவரின் தந்தை
உயிர்த்தெழுந்தாலும் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் அவரால் வீழ்த்த முடியாது.
மேலும் மேதின கூட்டத்துக்கு பெரும் மக்கள் கூட்டமொன்றை எதிர்பார்த்து அவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவுவகைகள் கிருலப்பனையில் சிதறிக்கிடப்பதை காணக்கூடியதாக இருந்தது. இவற்றுக்கெல்லாம் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்து களவெடுத்த பணமே செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் மேதினத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு சென்ற மஹிந்த மற்றும் ஜீ.எல்.பீரிஸ் அங்கு உக்ரேன் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்கவை சந்தித்துள்ளனர்.
உதயங்க வீரதுங்க தேடப்பட்டு வரக்கூடியவர். உக்ரேனில் இருப்பதாக தெரிவித்த உதயங்க எவ்வாறு தாய்லாந்துக்கு சென்றார் என்பதை பொலிஸார் தேடிப்பார்க்க வேண்டும். அரசாங்கம் கடந்த காலத்தில் பாரிய மோசடிகளை செய்தவர்களை கைதுசெய்யாமல் தொடர்ந்து சுதந்திரமாக விட்டிருப்பதாலேயே அவர்கள் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த காலத்தில் மேதினத்துக்கு மக்களை அழைத்துச் செல்வதற்கு இலங்கை போக்குவரத்து சபையால் பெற்றுக்கொண்ட பஸ்வண்டிகளுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை. ஆனால் இம்முறை மேதினத்துக்கு எந்த கட்சிக்கும் இலவசமாக பஸ் வண்டிகள் கொடுக்கக் கூடாது என அரசாங்கம் தெரிவித்தி
ருந்தது. இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு 45 மில்லியன் ரூபா லாபம் கிடைத்துள்ளது.
எனவே மஹிந்த ராஜபக் ஷ தனக்கு இராணுவ பாதுகாப்பு தேவையென்றால் நீதிமன்றத்தின் மூலம் அதனை பெற்றுக்கொள்ளவேண்டுமே தவிர அதனை சாட்டாகக் கொண்டு மஹிந்தவின் சகாக்கள் நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாதுஅத்துடன் பொலிஸாரினால் பாது
காப்பு வழங்க முடியாவிட்டால் மாத்திரமே இராணுவத்தினர் பாதுகாப்புக்காக அழைக்கப்படுவார்கள். உலகில் எந்த தலை வருக்கும் இராணுவ பாதுகாப்பு வழங்கப் பட்டதில்லை என்றார்.
kesari