இஸ்லாத்தின் பார்வையில் அனர்த்தங்களும்,அழிவுகளும்

எம்.எல்.பைசால் (காஷிபி)-
லகின் பல பகுதிகளிலும் அடிக்கடி அனர்த்தங்கள் இடம் பெற்று வருவதை இன்று நாங்கள் அவதானிக்கின்றோம்.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அசௌகரியங்களை தாங்கிக் கொண்டு வாழ்வதைக் காண்கிறோம்.

இந்த வகையில் எமது நாடான இலங்கையிலும் பெரும்பாலான பகுதிகளில் சென்றவாரம் வெள்ளப் பெருக்கும், அதனைத் தொடர்ந்து சில பிரபிரதேசங்களில் மண் சரிவும் இடம்பெற்று பல பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டிலுள்ள பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை இவ்வசாதாரண சூழ் நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

375604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்71 பேர் மரணித்தும் உள்ளனர் எனவும், 127 பேர் இடர்பாடுகளுக்கிடையில் சிக்குண்டு காணாமற் போயுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் பல வீடுகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள், மற்றும் பயிர் நிலங்கள், வியாபார ஸ்தலங்கள் என முற்றாக அழிந்து பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நடைபாதை வியாபாரிகள் முதல் முதலீட்டாளர்கள் வரை நிர்க்கதிக்குள்ளாகியினர். எதிர் வரும் நாட்களில் இலங்கைக்கு இவை மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும். 

மனித இனம் குறிப்பிட்ட காலப் பகுதிகளில் அழிவுகளை சந்தித்துக் கொண்டே வருகின்றது. இவ்வழிவுகள் இரு வகையாக இடம் பெறுகின்றன. ஒன்று மனிதர்கள் தமக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சினைகள் மூலமானவை. இரண்டு இயற்கை அனர்த்தங்கள் மூலமாக ஏற்படுபவை.

முதலாவது வகையினால் ஏற்படும் அழிவுகளை பின்வருமாறு நோக்கலாம். 

சில நாடுகளிலுள்ள சிறு பான்மை இனத்தவர்கள் பல்வேறு நோக்கங்களைக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்போராட்டங்கள் யுத்தமாக வெடித்து அதனால் நாளாந்தம் இன்னல்களைத் தாங்கிக் கொண்டு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக நிம்மதியற்று மக்கள் வாழ்கின்றனர்.

எடுத்துக் காட்டாக ஈராக்கில் நடாத்தப்படும் குண்டுத் தாக்குதல்கள்,மற்றும் சிரியா,யமன் போன்ற நாடுகளில் இடம் பெற்று வரும் யுத்தங்கள், இஸ்ரேலின் அடாவடித்தனங்கள் மூலம் பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் போன்ற நிகழ்வுகளைக் கூறலாம். 

இரண்டாவது வகையினை நோக்கும் போது காலத்திற்குக் காலம் பல நாடுகள் சுனாமி, புயல், காற்று, சூறாவளி, வெள்ளம், மண்சரிவு, பூகம்பம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்குள்ளாவதை நினைவு படுத்திப் பார்க்க முடியும்.

அமெரிக்காவின் கதரினா சூறாவளி, ஐப்பானின் சுனாமி, நேபாளத்தின் பூகம்பம், சென்னையின் பெரு வெள்ளம், அந்தாட்டிக் பிரதேசத்தின் எரிமலை வெடிப்புக்கள் என்பன சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். 

இவ்விரு வகை மூலமான பாதிப்புக்களினால் இலங்கை கசப்பான பல அனுபவங்களைக் கொண்டுள்ளதை மறக்க முடியாது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நடந்த யுத்த கால செயற்பாடுகளின் போது ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள், அதன் பயங்கர உணர்வுகள் என்பன எம் மனத் திரையைவிட்டும் இன்றும் அகலாமலேயே இருக்கின்றன. 

குறிப்பிட்ட காலங்களில் தளிர்விடும் இனவாத குழுக்களால் அரங்கேற்றப்படும் சிறுபான்மை சமூகத்திற் கெதிரான தாக்குதல்களையும், அதன் மூலம் அச்சமூகங்கள் அடைந்த துன்பங்களும், துயரங்களும் வர்ணிக்க முடியாத அளவிற்கு காயங்களை ஏற்படுத்தியுள்ளன. 

அதேபோன்று சூறாவளி,சுனாமி,மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் இலங்கை பல இழப்புக்களை சந்தித்துத்தான் இருக்கின்றது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்டத்தில் சில பிரதேசங்களிலுள்ள பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டலாம்.

அனர்த்தங்களினால் அல்லது மனித செயற்பாடுகளின் பாதிப்பினால் மனித இனம் மட்டுமல்லாது பல உயிரினங்களும் அழிகின்றன.

இதற்கான காரணம் என்ன? இதனை இஸ்லாம் எவ்வாறு நோக்குகின்றது? அனர்த்தங்களின் போது இஸ்லாம் கற்றுத்தரும் பாடங்கள் என்ன? பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி இஸ்லாமிய அணுகு முறை யாது ? போன்ற பல கேள்விகளுக்கு இஸ்லாத்தின் நிழலில் தெளிவான விடைகளை பார்க்க முடியும். 

இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டமைக்கு பௌதீக ரீதியான காரணங்களை பௌதிகவியலாளர்கள் கூறி தமது அனுமானங்களை வைத்து காரணம் கற்பிப்பர்.இருப்பினும் இஸ்லாம் அனர்த்தங்களை மனித உலகிற்கான சோதனையாகவே கூறுகின்றது. 

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள், ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்.ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நன்மாரயங் கூறுவீராக.” (2:155) 

“(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது,"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் ,நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.”(2:156) 

இச்சோதனைகள் மூலமாக அல்லாஹ் தனது அடியார்களை தன்பால் நெருங்கச் செய்தல், ஈமானை புதுப்பித்தல், பாவங்களிலிருந்து அவர்களை தவிர்ந்து கொள்ள வைத்தல், ஏனையவர்களுக்கு இதன் மூலமாக படிப்பினையினை உண்டாக்குதல், அந்தஸ்தினை உயர்த்துதல் போன்றவற்றைத் தவிர வேறு எதையும் அவன் நாடவில்லை. 

ஆதம் (அலை), யூனுஸ் (அலை), இப்றாஹீம் (அலை), போன்ற இறைவனின் நல்லடியார்களாகிய தூதர்கள் பல சந்தர்ப்பங்களில் இறைவனால் சோதிக்கப்பட்ட வரலாறுகள் இதற்குச் சான்றுகளாகும். 

சில வேளை சோதனைகள் வேதனைகளாகவும் மாறும். அவ்வாறு மாறும் போது சகலரையும் அது பாதிக்கும். நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசமின்றி அல்லாஹ்வின் வேதனை இறங்குவதாக எச்சரிக்கை செய்துள்ளதையும் கவனத்திற் கொள்ளலாம்.

“நீங்கள் வேதனைக்குப் பயந்து கொள்ளுங்கள்,அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதற்கில்லை-நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.”(8:25)

இச்சோதனைகள் வருவதற்கான பௌதீக ரீதியான காரணத்தினை அல்லாஹ் பின்வருமாறு விளக்குகின்றான்.

“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீச்செயல்களின்) காரணத்தால் கடலிலும்,தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின.(தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சில வற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கின்றான்”.(30:41)

“இன்னும் உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் வந்தது.”(4:79)

இவ்வசனங்கள் உலகில் குழப்பங்கள்,அழிவுகள்,தீங்குகள் ஏற்பட மனிதனும்,அவனது செயற்பாடுகளுமே காரணமாக உள்ளன என்பதைக் காட்டுகின்றன.

பாவச் செயல்களிலிருந்து விலகி மனிதன் சிறந்த செயற்பாடுகள் மூலம் இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவே மரணத்தையும்,வாழ்வையும் தான் படைத்துள்ளதாக பின்வரும் வசனத்தில் சுட்டிக்காட்டுவதன் மூலம் இறைவனின் அடியார்களாகிய ஒவ்வொருவரும் நன்மையான செயற்பாடுகளின்பால் அவசரமாக தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ளல் அவசியம். 

“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்”.(67:2)

இறைவனின் ஏற்பாட்டின் மூலம் ஏற்படும் இவ்வனர்த்தங்களுக்கு காரண காரியம் கற்பிக்க முடியாது. அவனது தீர்மானத்தின் பிரகாரமே சகல காரியங்களும் நடைபெறுகின்றன என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும். 

இந்நிலையில் பௌதீக ரீதியான சில உபாயங்களை மனிதன் மேற்கொள்ள கடமைப்பட்டுள்ளான். வெள்ளம் போன்ற அனர்த்தங்களின் போது நீர் தடைப்படாமல் இருப்பதற்காக ஆறு , குளங்களை மூடி,கட்டடங்களை அமைப்பதை விட்டும் தவிர்ந்திருத்தல், மலை நாட்டில் பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புக்களை அமைத்தல் போன்றன ஆபத்தின் கனதியிலிருந்து பாதுகாப்புப் பெற உதவும்.

அதேபோல் தூர்ந்து கிடக்கும் ஏரிகளை தூர்வாரி நீரினைத் தேங்கவிடாமல் பாதுகாக்கவும் முடியும், அரசு மட்டுமல்லாது பொதுமக்களும் இதில் மிகுந்த கவனத்தினைச் செலுத்துதல் அவசியமாகும்.

சோதனை இரு விதமாக ஏற்பட்டிருக்கின்றது.சிலரை அல்லாஹ் பாதிப்புக்களை ஏற்படுத்தியும்,சிலரை பாதிப்பின்றியும் சோதித்துள்ளான் என்பதை மறந்துவிடலாகாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து அவர்களது துக்கத்தில் பங்கு கொள்வது ஒவ்வொருவர் மீதுமுள்ள கடமையும்,பொறுப்புமாகும்.

“முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு உடம்பை போன்றவன்,தனக்கு நோய் ஏற்பட்டால் அவனது உடலின் ஏனைய அங்கங்கள் எவ்வாறு வேதனைப்படுமோ அதேபோன்று மற்ற முஸ்லிமுக்கு துன்பம் வரும் போது அவனது துன்பத்தில் பங்கெடுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.”

இலங்கையில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அங்கு வாழும் சகல சமூகமும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள்,முஸ்லிம் சமூகத்தின் நலன்புரி அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட சமூகத்திலுள்ள சகல மக்களையும் கவனத்திற் கொண்டு உதவிகளை மேற்கொள்வது இனரீதியாக பெரிதும் நன்மையினை ஏற்படுத்தும்.

“அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான மனிதர்கள் யார் என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் அவர்களில் மனிதர்களுக்கு எவர்கள் பிரயோசனமாக இருக்கின்றார்களோ அவர்கள்தான் என்றார்கள்”.

எதிர்வரும் றமழான் காலங்களில் இப்தார் வைபவங்களின் போது கஞ்சியையும், சிற்றூண்டிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதை விட இப்தாருக்கான ஆகாரமாக சமைத்த உணவை கொடுப்பதன் மூலம் இரட்டிப்பு நன்மை கிடைக்கும்,இது பற்றி பொறுப்பிலுள்ளவர்கள் சிந்தித்து நடைமுறைப் படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

சுனாமியின் பின்னர் சிறந்த முகாமைத்துவமின்றி சில கிராமங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை படிப்பினையாகக் கொண்டு நிவாரணங்களின் பங்கீடுகளின் போது அநியாயங்கள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளல் அவசியமாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய அரசியல் ரீதியான உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசியல் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் நினைவிற்கொண்டு செயற்படுவது எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

“யார் ஒரு முஸ்லிமின் சிரமத்தினை நீக்குகின்றானோ அதன் மூலம் அல்லாஹ் மறுமையில் அவன் படும் துன்பங்களை நீக்கிவிடுகின்றான்” என நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -