கலை இலக்கியத்துக்கு புத்துயிர்ப்பூட்டும் வகையிலும் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவை வளர்க்கும் பொருட்டும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கலை இலக்கிய பகுதியால் ஏற்பாடு செய்யப்பட தூவானம் கலை விழா 02.05.2016 திங்கட்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை கேட்போர் கூடத்தில் இயக்கத்தின் தலைவர் எம்.எல்.எம்.தெளபீக் தலைமையில் நடைபெற்றது.
சுமார் 300 கலை இலக்கிய ஆர்வலர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்ட இக்கலைவிழாவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் பிரதம அதிதியாகவும், கொழும்பு தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் தம்பு சிவா ஐயா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.பாரிஸ் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் மொழிகளின் வகிபாகம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய காப்பியக்கோ ஜின்னா ஷரீபுத்தீன் அவர்களுக்கு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் நினைவுச்சின்னத்தை வழங்கி கெளரவித்தார்.
பாடல்கள், கவிதைகள், நாடகம் என்பன இடம்பெற்ற இக்கலை விழாவில் தமிழ் விவாதிகள் கழகத்தோடு இணைந்து இடம்பெற்ற பட்டிமன்றம் பலரதும் பாராட்டை பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.