கடந்த அரசாங்க காலத்தில் முப்படையினருக்கு தேவையான ஆயுத இறக்குமதியின் போது லங்கா லொஜிஸ்டிக் நிறுவனம் மற்றும் இடைத்தரகர்கள் என்பவற்றின் ஊடாக இடம்பெற்று வந்த பாரியளவிலான ஊழல், மோஷடிகள் புதிய அரசாங்கத்திலும் முன்னர் போன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையினருக்கு பயிற்சிக்காக அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த காலத்தைப் போன்று ஆயுதம் நேரடியாக கொள்வனவு செய்யப்படாமல் இடைத்தரகர்கள் மூலம் இடம்பெறுவதனால் அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய பாரியளவிலான நிதி இழக்கப்படுகின்றது.
லங்கா லொஜிஸ்டிக் நிறுவனம் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் அவரினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். அதில் பணியாற்றுபவர்களும் அவருக்கு மிகவும் நெருங்கியவர்கள் ஆவார்.
ராஜபக்ஷ ஆட்சியின் தோல்வியுடன் அந்த நிறுவனத்தின் பிரதான பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் கீழ்மட்டத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இவ்வாறான கீழ் மட்ட அதிகாரிகள் இடைத்தரகர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு மிக் யுத்த விமானம் கொள்வனவு முதல் இந்த நிறுவனத்துடன் பல்வேறு இடைத்தரகர் நிறுவனங்கள் தொடர்புடையதாகவும் அவை குறித்து உடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஞாயிறு சிங்கள வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது.