திருகோணமலை மாவட்ட தோப்பூர் முஸ்லிம்கள் தமிழ் வேடுவர்களின் காணிகளை அடார்த்தியாக பிடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்பதுடன் இது தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை தோற்றுவிக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
தோப்பூர் முஸ்லிம்களின் பல காணிகள் விடுதலைப்புலிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் 30 வருடங்களாக அவர்களால் தமது காணிகளுக்கு செல்ல முடியாமல் இருந்தது. இதன் காரணமாக முஸ்லிம்களால் தமது காணிகளில் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட தமிழ் வேடுவர்கள் அடார்த்தமாக அக்காணிகளில் குடியேறினர்.
மஹிந்த ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பினால் யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து முஸ்லிம்கள் தமது காணி உறுதிப்பத்திரங்களை காட்டியே தமது காணிகளை சொந்தம் கொண்டாடுகிறார்கள். இது புரியாமல் சில தமிழ் அரசியல்வாதிகள் பொய் குற்றச்சாட்டுக்களை அவிழ்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
திருகோணமலை மாவட்டத்தின் கரையோர பகுதியில் தமிழ் வேடுவர்களின் காணிகளை முஸ்லிம்கள் அத்துமீறி பிடித்துள்ளதாக மகேந்திரன் என்பவர் பேசும் காணொளி வெளியாகியுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளபடக்கூடியதாக இல்லை.
காரணம் வேடுவர் என்பவர்கள் காட்டை தமது வாழ்விடமாக கொண்டவர்கள். மேற்படி பிரதேசம் கரையோரம் என்பதால் அது வேடுவர் பூமி அல்ல என்பது தெளிவாகிறது. அத்துடன் முஸ்லிம்கள் தமது பிராணிகளை அப்பிரதேசங்களில் வளர்க்கும் படி வேடுவர்களுக்கு பணித்ததாக சொல்லப்படுவதன் மூலம் புலிகள் காலத்தில் முஸ்லிம்கள் தமது நிலங்களுக்கு போக முடியாத சூழல் இருந்த்ததால் கிழக்கின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் தமது காணிகளை பார்த்துக்கொள்ளும்படி தமிழ் பொது மக்களிடம் கொடுத்திருந்தது போல் தோப்பூரை அண்டிய முஸ்லிம்கள் தமது காணிகளில் பிராணிகளை வளர்க்கும்படி வேடுவர்களுக்கு கொடுத்துள்ளார்கள் என்பது மஹேந்திரனின் பேச்சில் தெளிவாக தெரிகிறது.
அதே போல் இன்னும் சில முஸ்லிம்கள் பணம் கொடுத்து காணிகளை பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் 2010க்குப்பின் மஹிந்த அரசில் திருமலை மாவட்ட முஸ்லிம்கள் பாரிய கொடுமைகளை அனுபவித்தனர். தமது காணிகளுக்கு செல்வதைக்கூட ராணுவம் தடை செய்தது. இந்த நிலையில் அவர்கள் தமிழ் வேடுவர்களின் காணிகளை அடார்த்தியாக பிடித்தார்கள் என்பது அப்பட்டமான பொய்யாக தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த அரசிலும் முஸ்லிம்களின் ஆயிரம் ஏக்கர் காணிகளை சேருவில பன்சலைக்காக பிடிக்கப்பட்ட செய்திகளும் உள்ள நிலையில் முஸ்லிம்கள் அடார்த்தியாக காணிகளை பிடிக்க அரசு ஒரு போதும் இடமளித்திருக்காது என்பதை எந்த புத்தியுள்ள இலங்கை மகனுக்கும் புரியும். ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை பரப்பி தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை யாரும் வளர்க்க வேண்டாம் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.