நாச்சியாதீவு பர்வீன்-
நீண்ட காலமாக கிரான் பிரதேசத்தின் பொதுமக்கள், பாலமின்றி மிகுந்த அசெளகரியத்திற்கு உள்ளாகி வருகின்றனர், அன்றாடம் கூலி தொழில் செய்கின்ற இந்த அப்பாவி மக்களின் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கும் முகமாக கிரான் பாலத்தை துரிதமாக அமைக்க உதவுங்கள் என பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லச்மன் கிரியெல்ல அவர்களிடம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்தார்.
அன்மையில். பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் வைத்து அமைச்சர் லச்மன் கிரியெல்ல அவர்களிடம் இதுபற்றிய வேண்டுகளை பிரதி அமைச்சர் முன்வைத்த போது மேலும் அவர் தெரிவித்ததாவது, இந்தப்பிரதேசத்து மக்கள் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு தமது உடமைகள், உறவுகள் என்று எல்லாம் இழந்து வாழ்வாதாரம் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நல்லாட்சியின் பின்னர் நிம்மதியான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தாலும் இன்னும் யுத்தத்தின் தாக்கம் இந்த மக்களை விட்டு முற்றாக அகலவில்லை. வறுமைப்பட்டு வாழும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை செழிப்படையச் செய்வதும், இந்தப்பிரதேசத்து மக்களின் நிம்மதியான வாழ்வை உறுதி செய்வதும், இந்தப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதும் இந்த நல்லாட்சியின் தலையாய கடமையாகும்.
இந்த பாலத்தின் அத்தியாவசியத்தை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதனை துரிதமாக அமைக்க ஏகமனதான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 1200 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாலத்தின் மூலம் இந்தப்பிரதேசத்தின் விவசாயிகள், மீன்பிடித்தொழிலாளர்கள், வியாபாரிகள், சிறுகைத்தொழிலாளர்கள், சிறிய உள்ளூர் உற்பத்தியாளர்கள், சுயதொழில் செய்கின்ற பெண்கள் மற்றும் மாணவர்கள் என பலதரப்பினரும் பயனடைவார்கள். எனவே இந்த பாலத்தை துரிதமாக அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு உங்களது ஒத்துழைப்பை தாருங்கள் என பிரதியமைச்சர் அமீர் அலி வேண்டுகோள் விடுத்தார்.