முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு புலிகளின் அச்சுறுத்தல் இருப்பது உண்மை. அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (3) மேர்வின் சில்வாவின் ஊடகவியலாளர் மாநாடொன்று இடம்பெற்றது. அதில் ஊடகவியலாளர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழக்கும் பொழுதே மேர்வின் இவ்வாறு குறிப்பிட்டார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருந்த எந்த ஒரு தலைவரும் செய்யாத வேலையையே மஹிந்த ராஜபக்ஷ செய்துள்ளார். நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருந்த புலிகளை ஒழித்து, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தலைவர் மஹிந்த.
அதேவேளை, எமது நாட்டின் அதிரடிப்படை, ராணுவப் படை மற்றும் பொலிஸ் படை ஆகிய மூன்றும் பலம் பொருந்திய படைப்பிரிவுகள். இவர்கள் அனைவரும் சிறந்த முறையில் பயிற்சி பெற்று சேவையில் உள்ளவர்கள்.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ராணுவ பாதுகாப்பு இல்லை என்றால் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவ்வாறு ராணுவ பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ளலாம். எனினும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பது உண்மையான விடயம்’ என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.