யாழின் பல இடங்களை புரட்டியெடுத்த மினி சூறாவளி...!

பாறுக் ஷிஹான்-
பொன்னாலையில் சனிக்கிழமை (30) மதியம் திடீரென்று வீசிய மினி சூறாவளியால் வீடுகள், கடை மற்றும் பொதுக் கட்டிடங்களின் கூரைகள் சேதமாகியுள்ளன.

இதில் அண்மையில் வழங்கப்பட்ட இந்தியன் வீடு ஒன்றின் கூரை முற்றாக தூக்கி வீசப்பட்டது. கடந்த சில மாதங்களாக சுட்டெரித்த வெயிலால் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வலி. மேற்கின் பல இடங்களில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய பெரு மழை பெய்தது.

இதன்போது 2.30 மணியளவில் பொன்னாலையில் மினி சூறாவளியொன்று வீசியது. இந்த சூறாவளியால் பொன்னாலை தெற்கில் உள்ள நாகராசா அயன் என்ற குடும்பஸ்தரின் வீட்டுக் கூரை சுழல் காற்றினால் முற்றாக தூக்கி வீசப்பட்டது. அண்மையில் வழங்கப்பட்ட இந்திய வீடே இந்த அனர்த்தத்தில் கடும் சேதமாகியது. இவரது வீட்டுக்கு அண்மையில் அமைந்திருந்த தம்பிராசா குகேந்திரன் என்பவரது அரை நிரந்தர வீட்டின் முன் பக்க கூரையும் தூக்கி வீசப்பட்டது.

மேலும், பொன்னாலை சந்தியில் நாராயணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தொழிலாளர்களுக்கென கடந்த வருடம் அமைக்கப்பட்ட ஓய்வு மண்டப ஓட்டுக் கூரையின் ஒரு பகுதி தூக்கி வீசப்பட்டது.

இந்த கட்டிடத்திற்கு அருகில் வலி.மேற்கு பிரதேச சபையால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மீன் சந்தைக் கட்டிடக் கூரையின் ஒரு பகுதியும் தூக்கி வீசப்பட்டது. இதன் சீற்றுக்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

மேற்படி கட்டிடங்களுக்கு அருகே அமைந்திருந்த நாராயணன் தாகசாந்தி நிலையத்தின் கூரையின் ஒரு பகுதியும் தூக்கி வீசப்பட்டது. இந்தக் கட்டிடங்களுக்கு நூறு மீற்றர் தூரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையின் சீற்றுக்களும் தூக்கி வீசப்பட்டன.

பொன்னாலை சந்தியில், குடியேற்றத்திட்டத்தில் உள்ள கடை ஒன்றின் சீற்றுக்களும் தூக்கி வீசப்பட்டன. இதனால் இந்தக் கடையில் இருந்த அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களுக்குள் நீர் புகுந்தது.

இந்த அனர்த்தத்தை கேள்வியுற்ற பொன்னாலை கிராம சேவையாளர் ப.தீசன், மூளாய் கிராம சேவையாளர் ஆர்.சிறீரஞ்சன் மற்றும் வலி.மேற்கு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -