முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரிடம் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது.
நாவலப்பிட்டி நகரில் அரசாங்க காணியொன்றை பலவந்தமாக கையகப்படுத்தி அதில் நான்கு மாடி கட்டடமொன்றை அமைத்த சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்தவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பில் அடுத்த வாரமளவில் மஹிந்தனாந்தவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான 79 பேர்சஸ் காணியை பலவந்தமாக கைப்பற்றி அந்தக் காணியில் நான்கு மாடி கட்டடம் அமைத்து, அந்தக் கட்டத்தை அரசாங்க நிறுவனமொன்றுக்கு ஒரு லட்ச ரூபா வாடகை அடிப்படையில் மஹிந்தானந்த அலுத்கமகே வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்கனவே வரி ஏய்ப்பிலும், நிதிச் சலவையிலும் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உள்ளக விமான சேவை விமானங்களை துஸ்பிரயோகம் செய்ததாக நாமல் ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உள்ளக விமானப் பயணங்களுக்காக ஐந்து கோடி ரூபாவிற்கு மேல் நாமல் ராஜபக்ச செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2013 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு விமானங்களைப் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பண நிகழ்விற்கான கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக பெருந்தொகை பணம் செலவிட்டமை குறித்தும் நாமல் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.