எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி நகரசபை பிரிவிற்குட்பட்ட வடிகான்களின் மூடிகள் சிதைவடைந்த நிலையில் நீண்ட நாட்களாக திருத்தம் செய்யப்படாமல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி கடற்கரை வீதி, மீன்பிடி இலாகா வீதி, டெலிகொம் வீதிகளினதும் இன்னும் பல வீதிகளிலும் வடிகான் மூடிகள் உடைந்து மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
அதிகமாக மக்கள் பயன்படுத்தக் கூடிய இவ்வீதி வடிகான்களின் மூடிகள் உடைந்த நிலையில் காணப்படுவதால் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இது தொடர்பாக காத்தான்குடி நகரசபை செயலாளர் சர்வேஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த 2015 ஆம் ஆண்டு 5 இலட்சம் ரூபா வடிகான் மூடிகளுக்காக ஒதுக்கப்பட்டு 187 வடிகான் மூடிகள் போடப்பட்டதாகவும் 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காத்தான்குடியில் அன்மையில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நகர சபை வரிப்பணத்தை அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாமெனவும் அவசர தேவைகளுக்கே பயன்படுத்த வேண்டுமெனவும் அபிவிருத்திக்குழு தலைவர் இராஜாங்க புனர்வாழ்வு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே உரியவர்களின் அனுமதியை பெற்ற பின்னர் வடிகான்களின் மூடிகள் சீரமைக்கப்படுமென காத்தான்குடி நகரசபை செயலாளர் குறிப்பிட்டார்.