பி.எம்.எம்.ஏ.காதர்-
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிக்கும் நடவடிக்கை இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்புமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாத் பதியுதீனிடம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் எம்.ஐ.ஏ.ஜப்பார், செயலாளர் கலீல் எஸ்.முஹம்மத் ஆகியோர் கையொப்பமிட்டு அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
"சாய்ந்தமருது மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வருகின்ற தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கையிலுள்ள நியாயங்களை தெளிவுபடுத்தி, மக்களையும் புத்திஜீவிகளையும் அரசியல்வாதிகளையும் ஒருங்கிணைப்பதற்காக எமது சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் மிகவும் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வந்த போராட்டத்தின் பிரதிபலிப்பாக்க அக்கோரிக்கை அரசியல் தலைமைகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதனை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது கல்முனைத் தொகுதியில் பிரதான பேசுபொருளாக அமைந்திருந்த சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விவகாரம் மிகவும் சூடுபிடித்திருந்தது. நீங்களும் அது குறித்து பேசியிருந்தீர்கள். கல்முனை நகரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை ஸ்தாபிக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
ஆனால் ஒன்பது மாதங்களாகியும் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது விடயமாக அரசியல்வாதிகள் மட்டத்தில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.
ஆகையினால் பிரதமரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரைக்கும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவது தொடர்பில் தாங்கள் நாடாளுமன்றில் அவரிடம் கேள்வி தொடுத்து விசேட கவனஈர்ப்பை ஏற்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
இதன் மூலம் அவ்விடயம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றிய உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம்" என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.