இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜூன் மாத இறுதியில் மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு புதிய ஒருவரை நியமித்தல் அல்லது தற்போதைய ஆளுனரன் பதவிக் காலத்தை நீடித்தல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளில் ஒன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது பற்றிய தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
மத்திய வங்கி ஆளுனர் ஒருவரின் ஒரு பதவிக் காலம் ஆறு ஆண்டுகளாகும்.
புதிய ஆளுனர் ஒருவரை நியமிக்க இடமளிக்கும் நோக்கில் அஜித் நிவாட் கப்ரால் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதன் போது கப்ரால் நான்கரை ஆண்டு காலம் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் போது எஞ்சியுள்ள பதவிக் காலத்திற்கே அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
அர்ஜூன் மகேந்திரன் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் சில தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர். இவ்வாறான பின்னணியில் புதிய ஒருவரை ஜனாதிபதி ஆளுனராக நியமிப்பாரா அல்லது பிரதம ரணில் விக்ரமசிங்கற்கு நெருக்கமான அர்ஜூன் மகேந்திரன் தொடர்ந்தும் பதவி வகிப்பாரா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.