இவர்களுக்கு புரியும் பாஷை, போராட்ட பாஷைதான் என்றால் அதற்கு நாம் தயார் - அமைச்சர் மனோ கணேசன்

ந்த கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் மக்கள் எங்களுக்கு தந்தது. இதை எவரும் பறித்து எடுக்க முடியாது. எமது போராட்டம் காரணமாக அமைச்சர் பதவிகள் எடுக்கப்பட்டால், அதுபற்றி கவலைப்படும் காலம் இப்போது கடந்து விட்டது. 

எங்கள் தமிழ் தொழிலாளி பட்டினி கிடந்து சாக முடியாது. இவர்களுக்கு புரியும் மொழியில் பேசும் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. 

அதுதான் தொழிற்சங்க போராட்ட மொழி. போராட்டம் எங்களுக்கு புதிது அல்ல. ஆகவே மே 25ம் திகதிக்கு மலையக பாட்டாளிகளே தயாராகுங்கள் என்று எமது கூட்டணியின் சார்பில் அழைப்பு விடுக்கின்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின விழாவில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

தோட்ட தொழிலாளருக்கு ஒருநாள் சம்பளமாக 1000 ரூபா தர முடியவில்லை என்றால் அதற்கு உரிய மாற்று யோசனையை தோட்ட நிறுவனங்கள் முன்வைக்க வேண்டும். ஆனால் அதை செய்ய அவர்களுக்கு கடந்த 13 மாதங்களாக முடியவில்லை. 

கூட்டு ஒப்பந்த கையெழுத்துகாரர்களுக்கும் முடியவில்லை. நஷ்ட கணக்கு காட்டிக்கொண்டே நிறுவனங்கள் காலத்தை ஓட்ட நினைக்கின்றார்கள். இவர்களும் அதற்கு ஒத்து பாடுகிறார்கள். இந்நிலையில், இடைக்கால நிவாரணமாக 2,500 ரூபாவை ஏனைய தனியார் நிறுவனங்களை போல் தோட்ட நிறுவனங்களும் தர வேண்டும் என சண்டையிட்டு அரசாங்கத்தின் தொழிற்துறை அமைச்சர் மூலம் நாம் பாராளுமன்றத்தில் அறிவித்தோம். 

அந்த தொகையை தருவதற்கும் இப்போது நிறுவனங்கள் மீண்டும் நஷ்டக்கணக்கு காட்டி தயங்குகின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திறைச்சேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கம், தோட்ட நிறுவனங்களின் சங்க தலைவர் ஆகியோருடன் நானும், திகாம்பரமும், ராதாகிருஷ்ணனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பலமுறை பேசி களைத்து விட்டோம். 

மூடிய அறைகளுக்குள் இருந்து சண்டையிட்டுள்ளோம். பயனில்லை அல்லது நிலைமையில் முன்னேற்றம் இல்லை. அரசாங்க அமைச்சர்கள் என்றால் நாம் கோரும் அனைத்தும் கேட்டதும் கிடைத்துவிடும் என எவரும் தப்பு கணக்கு போடாதீர்கள். இது மூடிய அறையில் வீட்டுக்குள் இருந்தபடி, கையில் ஒரு ஸ்மார்ட் கைபேசியை எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவு போடுவது போன்று சுலபமான ஒரு விடயம் அல்ல. இதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

எங்கள் பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு வர ஒரு நிமிடம்கூட பிடிக்காது. இந்த பதவிகள் எமக்கு பெரிது அல்ல. நான் நினைத்து இருந்தால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னமே என்னால் ஒரு கபினட் அமைச்சர் ஆகி இருக்க முடியும். இன்று நானும், திகாம்பரமும் கூட கடந்த ஏழு மாதங்களாகத்தான் கபினட்டில் இருக்கின்றோம். 

ராதாகிருஷ்ணனும் ஒரு ராஜாங்க அமைச்சராக அப்படித்தான். இந்த பதவிகளை வைத்துக்கொண்டு தான், இலங்கை, இந்திய திட்டங்கள் மூலம் வீடு கட்டுவதில் இருந்து புதிய பிரதேச சபைகள் உருவாக்குவது வரை கடந்த பல வருடங்களாக மலையகத்தில் நடைபெறாத பல்வேறு விடயங்களை நாங்கள் செய்து வருகிறோம். இதற்கு முன் இருபது ஆண்டுகளாக பதவிகளில் இருந்தவர்கள் செய்யாதவற்றை இன்று நாம் கடந்த ஏழு மாதங்களுக்குள் செய்து வருகிறோம்.

இந்திய வீடமைப்பு திட்டத்துக்கு அடித்தளம் போட்டவர்கள் நாமே என்று சொல்பவர்கள் ஏன் அந்த திட்டம் கடந்த ஐந்து வருடங்களாக இழுபறி பட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்வதில்லை. 

நானோ, திகாம்பரமோ, ராதாகிருஷ்ணனோ, இந்திய வீட்டு திட்டம் தொடர்பில் எமக்குதான் வீடு கட்டும் ஒப்பந்த காண்ட்ராக்ட் வேண்டும், நாம் நியமிப்பவர்கள்தான் வீடுகள் கட்ட சீமெந்து, கற்கள் கொண்டு வர வேண்டும், கடைசியில் பயனாளிகளை நாம்தான் தெரிவு செய்வோம் என்று இந்திய அரசிடம் நிபந்தனைகள் போடவில்லை. வீடில்லா நம் அப்பாவி மக்களுக்கு வீடு வேண்டும் என்றுதான் நாம் நினைக்கின்றோம். 

அதற்காக எந்த ஒரு விட்டுக்கொடுப்புக்கும் நாம் தயாராக இருந்தோம். இந்திய அரசினால் மலைநாட்டுக்கு பஸ்கள் வழங்கப்பட்டன. அவை இன்று எங்கே?அந்த நிலைமை இந்திய அரசின் வீட்டு திட்டத்துக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என பொறுப்புடன் முடிவு செய்து தமிழ் முற்போக்கு கூட்டணி பணி செய்தது. அதனால்தான் கடந்த காலங்களில் இழுபறி பட்டு, இந்திய அதிகாரிகளையே இங்கே ஏன் வீடு கட்ட வந்தோம் என வெறுப்பேற்றிய இந்த திட்டம், இப்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி நடைமுறையாகிறது.

இந்த மற்ற விடயங்கள் தொடர்பில் சாதக நிலைமைகள் இருந்தாலும், இன்று தோட்ட தொழிலாளியின் வருமானம் செலவு, வருமானம் பற்றி நாம் அலட்சியமாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். எனவேதான், எமது பொறுமையை இழந்துவிட்டோம் என்று நான் சொன்னேன். 

இன்றைய தினத்தில் இருந்து 24 நாட்கள் அவகாசம் தருகிறோம். அதன் காரணம்,இந்த மாத சம்பள ஏற்பாடுகளில் இடைகால தீர்வு சேர்க்கப்பட்டு நிரந்தர தீர்வு நோக்கி மாற்று யோசனைகளை தர தோட்ட நிறுவனங்கள் முன் வரவேண்டும், அதற்கு திறைசேரியும் ஒத்துழைக்கவேண்டும் என பொறுப்புள்ள அமைச்சர்களாக நாம் நினைக்கின்றோம். 

ஆனால்,அதற்கு மேலும் எம்மால் பொறுக்க முடியாது. எனவே மே 25ம் திகதி புதன்கிழமை முழு மலையகம் தழுவிய அடையாள வேலை நிறுத்தம் செய்ய நாம் முடிவு செய்துவிட்டோம். அதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் அறிவிப்போம். கலகம் பிறந்தால்தான் தீர்வு வரும் என்றால் பிறக்கட்டும், சாத்வீக போராட்ட கலகம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -