ஷபீக் ஹுசைன்,ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-
பதுளை மாவட்டத்தில் லுணுகல நகரில் அல் - அமீன் முஸ்லிம் மகா வித்தியாலய கட்டடத்தின் மீது, அருகிலிருந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக படுகாயமடைந்த மாணவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், முற்றாக சேதமடைந்த கட்டடத்தை துரிதமாக மீள் நிர்மாணம் செய்வது தொடர்பில் ஊவா மாகாண முதலமைச்சர் சம்பத் சாமர தசநாயக்கவுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஹக்கீம்; மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிரஸ்தாப பாடசாலை கட்டடம் சேதமடைந்ததன் விளைவாக அங்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பகுதி நேர வகுப்பில் பங்குபற்றிய மாணவர்கள் 11 பேரும், ஆசிரியர் ஒருவரும் காயமடைந்ததாகவும், அவர்களில் படுகாயத்துக்குள்ளான ஐவர் பதுளை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், எனது கவனத்திற்;கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சிறுகாயங்களுக்குள்ளானோர் லுணுகல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது சம்பந்தமாக அங்கிருந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு லுணுகலையை பிறப்பிடமாகக் கொண்ட எனது அமைச்சின் இணைப்பாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான பி.தாஜுதீனைப் பணித்துள்ளேன்.
இதுதொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எமது கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.எஸ்.தௌபீகிற்கும் அவசியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.