எஸ்.என்.றிஸ்லி -
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20வது ஆண்டு நிறைவு விழாவின் பிரதான நிகழ்வு கொழும்பு 07 இல் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில், போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வின் போது சமூக மேம்பாட்டிற்காக உழைத்த மூவினத்தையும் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் ஆறு பேர் கௌரவிக்கப்பட்டதுடன், கூர் முனை என்ற 20ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் மற்றும் அமைச்சுக்கள், அரச, தனியார் நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், முஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபரங்கள் முதலானவற்றை உள்ளடக்கிய தகவல் திரட்டான 'மீடியா டிரக்டரியும்’ (Media Directory) பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவினால் வெளியிட்டு வைக்கப்பட்டன.
கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியரான பேராசிரியர் ஜே.பி.திஸாநாயக்க, சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மெனிக் டி சில்வா, வீ.தனபாலசிங்கம், தொழிலதிபர் ஹனீப் யூசுப் ஆகியோரும் விஷேடமாக இளம் சாதணையாளர் என்று சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும் வாழ்நாள் சாதணையாளர் என்று ஆய்வாளர் எம்.ஐ.எம்.மொஹிடீன் ஆகியோரும் பிரதமரினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின் போது வெளியிடப்பட்ட கூர் முனை என்ற விஷேட ஞாபகார்த்த மலரின் முதல் பிரதியை தொழிலதிபர் முஸ்லிம் ஸலாஹூத்தீனும், மீடியா டிரக்டரியின் முதல் பிரதியை ஊடகவியலாளர் மனிதநேயன் இர்ஷாட் ஏ. காதரும் பிரதமரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
ஜாமிய்யா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அஹார் முஹம்மத் மற்றும் ஆசிய பசுபிக் சர்வதேச ஊடக ஒத்துழைப்பு (டென்மார்க்) அமைப்பின் பிராந்திய ஆலோகர் கலாநிதி ரங்க கலன்சூரி ஆகியோர் விஷேட உரையையும், போரத்தின் செயலாளர் ரிப்தி அலி வரவேற்புரையையும், உப செயலாளரும் மாநாட்டுச் செயலாளருமான ஸாதிக் ஷிஹான் நன்றியுரையும் நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, றவுப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ. ஹலீம், பைசர் முஸ்தபா, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரைக்கார், நவவி, இஷாக், கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், ஓய்வுபெற்ற நீதியரசர் கபூர் மற்றும் கல்விமான்கள், உலமாக்கள், சமயத் தலைவர்கள், புத்தி ஜீவிகள், நாடளாவிய ரீதியில் உள்ள போரத்தின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.