கஜரூபன்-
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் தமிழர்களின் அரசியல் பலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் வகையில் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது மேலாதிக்கத்தினை செலுத்தி தன்னிச்சையான பல முடிவுகளை எடுத்து அதனை அரங்கேற்றி வருகின்றமை ஆரோக்கியமான விடயமல்ல.
இந்நிலை இனிவரும் காலங்களில் தொடர விடாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல பங்காளிக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே உள்ளது. இவ்வாறு அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் தொழிற்சங்கவாதியுமான எஸ்.லோகநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
வடக்கு கிழக்கை மையமாகக் கொண்டு தொழிற்பட்டு வந்த சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் தத்தமது கட்சிகளின் கொள்கைகள், கோட்பாடுகள் என்பவற்றுக்கப்பால் பொதுநோக்கின் அடிப்படையில் தமிழர்களின் அரசியல் பலத்தை உலகறியச் செய்யும் வகையிலும் ஒன்றுபட்ட சக்தியாக தமிழர்கள் ஓரணியில் திரண்டுள்ளார்கள் என்பதை உணர்த்தவும் உருவாக்கம் பெற்றதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.
பிரபல ஊடகவியலாளரான அமரர் டி.சிவராம் – கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக ஏ.எல்.எம்.சலீம் பதவி வகித்த காலத்தில் இச் சங்கத்தின் உறுப்பினர்களான நாட்டுப் பற்றாளர் ஜி.நடேசன், இரா. துரைரெட்ணம், சண், தவராசா, எஸ்.ஜெயானந்த மூர்த்தி, பா.அரியநேத்திரன், செல்லையா, பேரின்பராசா, த.வேதநாயகம், உதயகுமார் போன்றோரை அழைத்து இச்சங்கத்தின் மூலமாக பிரிந்து செயற்பட்ட சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்றுவித்தார்.
அமரர் டி.சிவராம் என்ன நோக்கம் கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்றுவித்தார் என்பதை மறந்தவர்களாக இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மேலாதிக்கம் செலுத்துவதையும் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொள்வதும் டி.சிவராமிற்கு செய்யும் துரோகமாகும்.
சமீபத்தில் யாழ். மருதனார் மடத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை தவிர இக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய பங்காளிக்கட்சிகளான புௌாட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் பங்கு கொள்ளாமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைவிட்ட பாரிய தவறாகவே நோக்க வேண்டியுள்ளது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான காலம் கனிந்துள்ள நிலையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு கயிற்று நார் போன்று ஒன்றுபட்ட சக்தியாக இல்லாது போனால் அதன் தாக்கம் அல்லது பாதிப்பு என்னவாகும் என்பதை கூற வேண்டியதில்லை.
ஒரு தந்தையின் நிலையில் அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் கொண்டவராக விளங்கும் இரா.சம்பந்தன் எக்காரணம் கொண்டும் எமது பலம் சிதைவடையா வண்ணம் தமிழர்களின் பலத்தை உறுதி செய்ய வேண்டும். கடிவாளம் அற்ற குதிரையைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிக்காது நிதானமாக எமது மக்களின் எண்ணங்கள், அரசியல் அபிலாஷைகள் ஈடேறும் வரையும் விட்டுக்கொடுப்பு, சகிப்புத் தன்மையுடன் பங்காளி கட்சிகளை அரவணைத்து பயணிக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிந்த பின்னர் எதிர்க்கட்சியில் இருந்து, ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சியாக மாறிய வேளையில் தனக்கு கிடைத்த இரண்டு மாகாண அமைச்சுக்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி பங்கு போட்டுக் கொண்டமையும், இன்று இந்த மாகாண அமைச்சர்கள் செயல்திறன் அற்றவர்களாகவும், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளையும், தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க முடியாதவர்களாகவும் உள்ளதை கண்டு கவலையடைய வேண்டியுள்ளது.
கடந்த 23 வருட காலமாக தமிழ்த் தேசியத்திற்காக எமது தொழிற்சங்கம் சார்பில் பல போராட்டங்களை முன்னெடுத்தவன் என்ற வகையில் தமிழர்களிடையே வேற்றுமையை களைந்து ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
எனவே, இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லாமல் செயற்பட்டால் நாம் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.