சாய்ந்தமருது மக்களுக்கு நாபீரின் திறந்த மடல்...!

ன்றும் என் அன்பிற்கினிய சாய்ந்தமருது வாழ் அன்பர்களே! நண்பர்களே! உடன்பிறப்புகளே!

உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்...

450 வருடங்களுக்கும் அதிகமான நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது எமது சாய்ந்தமருதூர்.ஒரு காலத்தில் அரசியல், கல்வி, கலை, கலாச்சாரம், பாரம்பரியம் என்பனவற்றில் கோலோச்சிய வம்சத்தில் வந்தவர்கள் நாம் என்பதை ஒரு போதும் மறந்து விடக்கூடாது. ஆனால் இன்று சாய்ந்தமருதூர் பல விடயங்களை இழந்து நிற்கிறது.

நண்பர்களே!

எமதூரின் மூதாதையர்கள், கல்விமான்கள், உலமாக்கள், முதுசங்கள் கட்டிக் காத்த அரசியல், கல்வி, சமூகப் பாரம்பரியங்கள் யாவும் துரதிஷ்டவசமாக மறைக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை சாய்ந்தமருது மக்கள் அயல் கிராமத்து மக்களுக்காக பல விட்டுக் கொடுப்புகளை மனம் உவந்து செய்துவந்திருக்கின்றனர். எமதூரின் எல்லை நிர்ணயத்திலிருந்து பல விடயங்கள் இதில் உள்ளடங்கும்.

எமது மக்கள் நியாயத்தின் பக்கம் தங்கள் மனக் கதவைத் திறப்பவர்கள். சகல காரியங்களிலும் பிரதேசவாதமற்று செயற்படும் இதய சுத்தியானவர்கள் சாய்ந்தமருது மக்கள் என்பது கடந்த கால அரசியல் சரிதத்தை புரட்டுகின்ற போது தெளிவாக புலப்படும்.

அனேகமான தருணங்களில் ’நேர்மையாளன் முட்டாளாகின்றான்' எனும் உலக யதார்த்தத்திற்கமைய சாய்ந்தமருதுமக்கள் அரசியல் பச்சோந்திகளால் காலாதிகாலம் ஏமாற்றப்படுகின்ற மக்களாகவும் சித்தரிக்கபடுகின்றனர். இதில் உண்மை இல்லாமலில்லை. கடந்த காலம் இதற்கு சிறந்த சாட்சியமாக இருக்கிறது. ’சாய்ந்தமருது மக்கள் குட்டக் குட்ட குனிகின்ற மக்கள், அவர்களை நன்றாக ஏமாற்றிப் பிழைக்கலாம்’ எனும் மனச் சித்திரம் இவ்வூரை மையமாக வைத்து அரசியல் பிழைப்பு நடாத்துகின்ற அரசியல் வியாபாரிகளின் வேதவாக்காக மாறி இருக்கிறது.

மகா சோகம் யாதெனில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த எமது ஊருக்கு அண்மையில் தான் பெயர்ப் பலகைநட்டினார்கள் என்பது. இது சின்ன உதாரணம். இது போல எண்ணற்ற பல விடயங்களில் நாம் அலைக்கழிக்கப்பட்டிருக்கின்றோம்.

சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காய் நான் மேற்கொண்டசவால்மிக்க நடவடிக்கைகளை நினைத்துப் பார்க்கின்றேன். 1994 ஆம் ஆண்டிலிருந்து சாய்ந்தமருதிற்கு பிரதேச செயலகம் கேட்டு நாங்கள் முழு மூச்சாக போராடிய போது அன்று பலர் அதற்கெதிராக பாரிய தடைக்கல் போட்டார்கள். எம்மை அச்சுறுத்தினார்கள்.

என்னுடன் இணைந்து இப்போராட்டத்தில் அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கரையோர பிரதேசத்திற்கானஅமைப்பாளர்-சிரேஷ்ட சட்டத்தரணி யூ.எல்.நிஸார் மற்றும் இன்றைய சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின்நிர்வாக உறுப்பினர் அல்ஹாஜ்.மஜீத் (ரோஷான்) ஆகியோர் முழு மூச்சாக களமிறங்கினார்கள் என்பதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

அன்று சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச செயலகம் கோரும் எமது செயற்பாட்டின் முதல் அங்கமாக அன்றைய உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரை சந்திக்க தலைநகர் கொழும்பிற்கு சிரேஷ்ட சட்டத்தரணி யூ.எல்.நிஸார் அவர்களின் தலைமையில் ஒரு குழு பயணித்தோம். இந்த சந்திப்பை படம்பிடிக்க அன்று கல்முனையில் படப்பிடிப்பில் புகழ்பெற்ற தமிழ் சகோதரர் திரு.புண்ணியமூர்த்தியை அழைத்துக் கொண்டு சென்றது மனக்கண்ணில் இன்னும் நிழலாடுகிறது.

சாய்ந்தமருதிற்கான பிரதேச செயலகம் கோரும் நடவடிக்கையின் அடி நாதமாக மக்கள் கருத்தறியும் ஒரு கூட்டத்தை 1998 ஆம் ஆண்டளவில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்தோம். இந்தக் கூட்டத்தை எங்களை நடாத்த விடாமல் அன்றைய முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைத் தொகுதியின் அரசியல் அதிகாரத்தோடு இருந்த ஒரு சிலர் பாரிய முட்டுக்கட்டை விதித்தார்கள்.

உரிய முறையில் பாடசாலையில் கூட்டம் நடாத்த நாம் அனுமதி பெற்றும், கூட்டம் நடைபெறுவதை தடுப்பதற்காக பாடசாலை பிரதான கேற்றை மூடி விடுமாறு ஒரு சில அரசியல்வாதிகள் அன்றைய அதிபர்அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் அதிபர் பாடசாலையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார். பின்னர் நாம் நேரடியாக வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு, மிகுந்த பிரயத்தனப்பட்டு பாடசாலையைத் திறந்து அந்தக் கூட்டத்தை நடாத்தினோம்.

இந்த சம்பவத்திற்கு அன்று கூட்டத்தை நடாத்திய நாமும், கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களும்வாழுகின்ற சாட்சியாக இருக்கின்றனர். சாய்ந்தமருது பிரதேச செயலகம் கோரிய அந்த மக்கள் சந்திப்பு எமக்கு வெற்றிகரமான முடிவுகளை தந்தது. பின்னர் எல்லை நிர்ணய சபைக்குச் சென்று பலர் சாட்சியமளித்தோம்.

நாம் எமது ஊரின் நலனில் கருத்திற் கொண்டு தொடர்ந்தேச்சியாக போராடி வந்தோம். அதன் விளைவாக, 1999டிசம்பர் 19 ஆம் திகதி சாய்ந்தமருதிற்கு உப பிரதேச செயலகம் வழங்கப்பட்டு, 2001 பெப்ரவரி 04 ஆம் திகதி தனியான பிரதேச சபையாக தரமுயர்த்தப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச செயலகம் கிடைத்த போது, இதற்கு ஏற்கனவே முட்டுக் கட்டையாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தங்கள் அரசியல் இலாபத்திற்காய் இதனை தாமே பெற்றுக் கொடுத்ததாக பீத்திக் கொண்டார்கள். ‘ஊராண்ட கோழி அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவது’ இவர்களுக்கு அன்றிலிருந்து ஒரு வாடிக்கையான விடயமாகவே இருந்து வருகிறது.

இதே பாணியிலே இப்போது சாய்ந்தமருதிற்கான பிரதேச சபை கோரிக்கையும் இழுபறியில் இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சாய்ந்தமருது மக்கள் ஒரு விடயத்தை அடைய வேண்டுமென்றால் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சொல்லில் அடங்காது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை விடயத்தில் அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும், முன் நகர்வுகளையும் - மிகச் சிறப்பாக கச்சிதமாக செய்து வைத்திருக்கின்றார். 

ஆனால் பழம் நழுவிப் பாலில் விழவிருந்த நேரத்தில் வழமை போல் மு.கா.காரர்கள் இதற்கு இடையூறு செய்து தடுத்து விட்டார்கள். ஆனால்,இறை நீதியையும் நியதியையும் இவர்களால் தடுக்க முடியாது.

இடையில், ’பாட வந்தால் கிழவியும் பாடுவாளாம்’ தோரணையில் சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபையை பெற்றுத் தருவோம் என கூக்குரலிடும் அ.இ.ம.கா. வின் நடவடிக்கை இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய காமெடியாக இருக்கிறது. மு.கா போலவே அ.இ.ம.கா வும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றலாம் எனும் எண்ணக்கருவை சுமந்து கங்கணம் கட்டி அலைகிறது. வெறும் உஷார் மடையர்களை உசுப்பேற்றுவதைத் தவிர,இவர்களால் உருப்படியாய் எதுவும் கிழிக்க முடியாது.

ஊரில் இருக்கிற ஒரு சில வங்குரோத்து அரசியல் தரகர்களை வைத்துக் கொண்டு சத்தியத் தலைமையானவர்சாய்ந்தமருது மக்களை படு ஜோராய் ஏமாற்றாலாம் என பகற் கனவு காண்பது மிகத் துல்லியமாக தெரிகிறது. ஆனால், அந்தக் காலம் மலையேறி விட்டது. மக்கள் அனைவரையும் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றார்கள். இப்போதெல்லாம் அரசியலில் தக்க சமயத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது.

’கலகம் பிறந்தால் நீதி பிறக்கும்’ எனும் அடிப்படையில் வெகு விரைவில் இன்ஷா அல்லாஹ், சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை கிடைக்கும். அதனை முஸ்லிம் காங்கிரஸ் செய்யாவிட்டாலும் செய்தது போல் ஒரு பிரமை ஏற்படும். எப்படியும் ஏற்படுத்தி விடுவார்கள்.

இன்றைய சூழலில் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை கோரிக்கை சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸிற்கு எவ்வித அடிப்படை வேலையுமில்லை. அவ்வேலைகள் யாவும் அட்சர சுத்தமாக நடைபெற்றுமுடிந்திருக்கிறது. இவர்கள் இதய சுத்தியுடன் இவ்விடயத்தை நாட்டின் அரசியல் தலைமைகளுக்கு எத்தி வைத்தால் அது உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கோ அல்லது நாளைக்கோ வழங்கப்பட்டு விடும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் இவ்விடயத்தில் மனம் வைக்கவில்லை.

இனி வருவது தேர்தல் காலம் என்பதால் சாய்ந்தமருது மக்கள் மீது அன்பு காட்டுவது போல் ஒரு பிரமையைஏற்படுத்துவார்கள். அந்த அன்பு நிரந்தரமில்லையென்பதை அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று வெறும் அரசியல் இலாபத்திற்காய் சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கையை உரத்துப் பேசும் பச்சோந்திஅரசியல்வாதிகளின் பொய் முகங்களை எமதூர் மக்கள் இனியாவது புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். எமதூர் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவர்களுக்கு நாம் ஆகச் சிறந்த பாடம் புகட்ட வேண்டும். எம் பாரம்பரிய ஊரின் அரசியலில் புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்.

நமது ஊரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய சுயலாபம் கருதாத அரசியல் சக்திகளை நாம் உருவாக்க வேண்டும். நாபீர் பவுண்டேஷன் எமது மக்களின் முன்னேற்றத்தில் அன்று போல் இன்றும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனது ஊரின் பிரச்சினைகளை, தேவைகளை நான் நன்கறிந்தவன். எமது மண்ணை பகடைக்காயாக வைத்து அரசியல் கபட நாடகம் ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் ஒரு போதும் துணை போகக் கூடாது.

என் பாசமான உடன்பிறப்புகளே,

சற்று சிந்தியுங்கள். இது நமது காலம். நாம் பட்ட துன்பங்கள்- துயரங்களை எமது பிள்ளைகள் மற்றும் சந்ததிகள் படக்கூடாது. குறுகிய சிந்தனைகளை கை விட்டு நமது மண்ணை நமது பிள்ளைகள் நேசித்து வாழ்வதற்கான ஒரு இனிய சந்தர்ப்பத்தை உருவாக்குமாறு உங்களை அன்பாய் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வஸ்ஸலாம்...

ஊடகப்பிரிவு.

அல்ஹாஜ்.நாபீர் உதுமான்கண்டு
நிர்மாண முகாமைத்துவ முதுமாணி
ஸ்தாபகர்- நாபீர் பவுண்டேசன்
சமூக சிந்தனையாளர்
முகாமைத்துவ பணிப்பாளர் - ECM (Pvt) Ltd.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -