கண்டி முஸ்லிம் பாடசாலையின் சிங்கள ஆசிரியைகள் தொடர்பில் பொய்ப் புரளி - அமைச்சர் ஹக்கீம்

ண்டி மாவட்டத்தின் முக்கியமான முஸ்லிம் பாடசாலையொன்று தொடர்பில் சமூக வலைத்தளங்களினூடாக வெளியாகியுள்ள பரபரப்பான பொய் வதந்தியொன்றின் விளைவாக இந்நாட்டு முஸ்லிம்கள் பற்றி சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் தவறான மனப்பதிவு ஏற்படுவதோடு, தேசிய நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு உண்டாவதாகவும் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், 

அதனால் இந்த விவகாரத்தையிட்டு கல்வியமைச்சு, இரகசியப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, தவறிழைத்தவர்களைக் கண்டு பிடித்து அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இந்தப் புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

கண்டி முறுத்தலாவை தெஹியங்க அல்-இல்மா முஸ்லிம் பாடசாலையில் புதிய கட்டிடமொன்றை ஞாயிற்றுக்கிழமை (29) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தாவது,

இந்தப் பாடசாலையில் பணியாற்றும் சிங்கள ஆசிரியைகள் பற்றி வலயக் கல்விப் பணிப்பாளர் சிலாகித்துக் கூறினார். மாணவர்களுக்கு கற்பித்தலுக்கு அப்பால் கல்விசார் மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் சிங்கள ஆசிரியைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனமை மெச்சத்தக்கதாகும். குறிப்பாக இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு அவர்கள் தியாக சிந்தையுடன் கடமையாற்றுகின்றார்கள்.

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி கண்டி மாவட்டத்திலுள்ள ஒரு முன்னணி பாடசாலை தொடர்பில் ஒரு பாரதூரமான விவகாரம் பரப்பப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் அந்த உயர்தரத்திலான பாடசாலையின் நிருவாகம் குறித்து பிரச்சினை தோன்றியிருந்தது. 

அந்தப் பாடசாலையின் பெண் அதிபரைப் பொறுத்தவரை ஊர் மக்கள் மத்தியில் திருப்தி இருக்கவில்லை. ஆகையால் அங்கு அண்மையில் பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வலயக் கல்விப் பணிப்பாளர், தேசிய பாடசாலைகள் பணிப்பாளர், கல்வியமைச்சு செயலாளர் ஆகியோர் கலந்துரையாடி அதிபர் இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென ஒரு தீர்வை மேற்கொண்டார்கள். 

அந்த அதிபர் திறமையற்றவர் மிகவும் சிறந்ததாகக் கருதப்பட்டு வரும் அந்தப் பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. நிர்வாகச் சீர்கேடும் நிலவியது.

இவ்வாறிருக்க, இந்த விடயத்தில் கல்வியமைச்சு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்திருந்த நிலையில் அந்த பெண் அதிபர், பெற்றோரை வேறு காரணத்தை கூறி வரவழைத்து தன்னை இடமாற்றம் செய்யக் கூடாது என அவர்களிடமிருந்து கடிதமொன்றில் கையொப்பம் பெறுவதற்கு எத்தனித்ததால் பிரச்சினை உக்கிரமடைந்தது. 

அதன் பின்னர் பாடசாலையின் ஆசிரியையின் கணவரென தம்மை அடையாளப்படுத்தி ஒருவர் ஜிஹாத் அமைப்பினால் கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்ததாக இணைய வலைத்தளங்களில் செய்தியொன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதன்படி பாடசாலையில் கற்பிக்கும் சிங்கள ஆசிரியர்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டு எழுதப்பட்டிருந்த அந்த போலிக் கடிதம் மிகவும் பாரதூரமானது. தொடர்ந்து அதிபருக்கெதிரான சிலர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு நிலைமை மோசமடைந்து விட்டது. 

அவ்வாறான ஓர் இயக்கம் அல்லது அமைப்பு இல்லாத நிலையில் இந்த நிலைமை அந்த பாடசாலைக்கு ஏற்பட்டது.

குறிப்பிட்ட சிங்கள ஆசிரியை மீது அக்கிராம மக்கள் மத்தியில் நன்மதிப்பிருந்து வந்தது. சுயநல நோக்கத்துடன் சிலரால் மேற்கொள்ளப்படும் விஷமச் செயலின் காரணமாக நல்லிணக்கமும், கல்வியும் பெரிதும் பாதிப்படைகின்றன. 

இவ்வாறான தீய செயலின் விளைவாக நாடெங்கிலும் வாழும் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் மட்டுமல்ல, முஸ்லிம்கள் மத்தியிலும் தவறான கருத்துக்கள் பரவி விட்டன. சமூக வலைத்தளங்களில் இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் பொழுது அநேகமாக அவற்றின் விளைவுகளை மீளப்பெற முடியாது.

ஆகையால், கல்வியமைச்சு மட்டுமல்ல, குற்றப்புலனாய்வுப் பிரிவும் கூட்டாக இந்த விடயத்தில் அவசரமாக உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

உங்களது கல்வி வலயத்தில் 20 தமிழ் மொழி மூல பாடசாலைகள் வரையுள்ளன. அவற்றில் 100பேர் வரை ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. அதை நிவர்த்திப்பதற்கு ஒரு மாற்று வழியாக ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

இந்நிகழ்வில் தெனுவர வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி டபிள்யூ.எம்.சீ.வீரக்கோன், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான சீ.எம்.எம்.மன்சூர், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.நயீமுல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -