கடந்த மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்ற பல்வேறு மோசடி நடவடிக்கைகளை மூடி மறைக்கும், நடவடிக்கையில் சமகால அரசாங்க அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் யுவன்ஜன மற்றும் சுஹத கம்லத் ஆகியோரினால் வழக்கு தாக்கல் செய்யாமல் ஆவணங்களை மறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 10ம் திகதி புதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய நியமிப்பட்டார்.
எனினும் இவராலும் மோசடியாளர்களுக்கு எதிராக செயற்பட முடியவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
புதிதாக தெரிவானவர் நியாயமாக செயற்பாட்டாலும், அவரை சுற்றியுள்ளவர்கள் மஹிந்தவின் விசுவாசிகள் என தெரிய வருகிறது.
புதிய சட்டமா அதிபர் பதவியேற்ற போதும், மோசடிகாரர்களுக்கு எதிராக நிதி குற்ற விசாரணை பிரிவினால் நிறைவு செய்து கொடுக்கப்பட்ட 22 கோப்புகள் தொடர்பில் தகவல் இல்லை.
மோசடிகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதில் தாமதம் உள்ளதாக பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகியது.
இதற்கு பதிலளித்த சட்டமா அதிபர் திணைக்களம், குற்ற விசாரணை பிரிவினால் கொடுத்த கோப்புகள் 22 அல்ல 32 எனவும், அவை அனைத்தையும் ஆராய்ந்து 3 மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனினும் நேற்றைய தினத்துடன் மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் எந்தவொரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை.
துறைமுகங்களின் முன்னாள் தலைவர் பிரியத் பந்துவிக்ரமவின் ஊழல் தொடர்பில் விசாரணை நிறைவு செய்து அதற்கான கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையிலும் பிரியத் பந்துவிக்ரமவுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
சஜின் வாஸ் குணவர்தன ஜனாதிபதி செயலகத்திற்காக கொண்டு வரப்பட்ட வாகனங்களை தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் முழுமையாக விசாரணை நிறைவடைந்து கோப்புகள் ஒப்படைக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு வருட காலமாகியுள்ள போதிலும் அது தொடர்பிலும் நடவடிக்கை இல்லை.
ராஜபக்ச குடும்பத்தினரை கைது செய்வதற்கு போதுமான அளவு ஆதாரங்கள் உள்ள போதிலும் அவர்களை கைது செய்வதற்கான சட்ட ஆலோசனை வழங்காமல் ராஜபக்சாக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
தாஜுடீன் கொலை செய்யப்பட்டதற்கான காணொளியில் நாமல் இருந்த போதிலும், நாமலை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைக்கவில்லை.
மல்வானை மாளிகை தொடர்பில் பசில் ராஜபக்சவை கைது செய்வதற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஆலோசனை கிடைக்கவில்லை.
சட்டமா அதிபரின் உதவியாளர் ஒருவரின் மனைவி கொக்காகோலா நிறுவனத்தின் சட்ட அதிகாரியாகும்.
கொக்காகோலா நிறுவனம் களனி கங்கையில் நச்சுக் கழிவுகள் சேர்ப்பது தொடர்பிலான பொலிஸ் விசாரணை கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்தில் மறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.tw.jm