எம்.வை.அமீர் -
முஸ்லிம்களின் பெரும்பாலான ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்துக் கொண்ட நல்லாட்சி அரசானது, இன்று வரை முஸ்லிம்களின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளில் இன்னும் கரிசனை செலுத்தாதது மூடு மந்திரமாயிருக்கிறது. என்று நாபீர் பவுண்டேசனின் ஸ்தாபகரும் சமூக சிந்தனையாளரும் நிர்மாண முகாமைத்துவ முதுமாணியுமான உதுமான்கண்டு நாபீர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியிலும் பல இன்னல்களை அனுபவித்த முஸ்லிம்கள், நல்லாட்சியில் கூட புறக்கணிப்பிற்கு உள்ளாகி வருவது கண்கூடுஎன்றும், தர்ஹா நகரில் நடைபெற்ற வன்முறைகளுடன் தொடர்பான சூத்திரதாரிகளுக்கு இந்த ஆட்சியில் உரிய தண்டனை வழங்கப்படவில்லை.
தர்ஹா நகர் கலவரம், பள்ளியுடைப்பு போன்ற காரணிகளை கடந்த ஜனாதிபதித் தேர்தல்,பொதுத் தேர்தல்களில் அரசியல் மேடைகளில் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் உதவியுடன் கூக்குரலிட்டு ஆட்சியை கைப்பற்றியவர்கள் இன்று வெற்றிக்கு காரணமான முஸ்லிம்களை புறக்கணிப்பது மன வேதனைக்குரியது.
அன்று அரசியல் மேடைகளில் ‘ஆனையாக்குவோம், பூனையாக்குவோம்’ என்று வெற்றுக் கோஷங்களை எழுப்பிய எமது சமூகத்தின் தானைத் தலைவர்கள் என உரிமை கொண்டாடுபவர்கள் இன்று வாய் மூடி மௌனமாகி விட்டனர். இலகுவாக தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகள் கிடப்பில் போடப்பட்டு இன்னும் ஊறிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, கடந்த சுனாமியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரசாங்கத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகள் இனவாதத்தின் கருமை முகங்களுக்குள் அகப்பட்டு இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருப்பது அம்மக்களை பொறுத்த வரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.
வட்டமடு காணி விவகாரமும் இதே போக்கிலேகாணப்படுகிறது. ஒலுவில் மக்களின் துறைமுகத்திற்கு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான தகுந்த நஷ்ட ஈட்டுப் பிரச்சினை, குச்சவெளி முஸ்லிம்களின் பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் இனம் காணப்பட்டு தீர்க்கப்படாமலிருக்கின்றன.
இதைப் போல, இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வாய்ப்பிருந்தும் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது யாரை திருப்திப்படுத்த என்பதை இவ்வரசுடன் ஒட்டியிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சமூகத்திற்கு விளக்க வேண்டும். எனவே, இது குறித்த பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணப்படல் வேண்டும்.
இல்லாவிட்டால் எமது பிரச்சினைகளுக்கு எம்மால் அரசியல் தீர்வு காணும் சக்தி எம்மிடம் இருக்கிறது என்றும் உடனடியாக மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் முடியாதபட்சத்தில் செய்கின்றவர்களிடம் வாய்ப்பைக் கொடுங்கள் என்றும் உதுமான்கண்டு நாபீர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.