காரைதீவு நிருபர் சகா-
தேசிய நல்லிணக்கத்தை பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக ஹம்பாந்தோட்டை வலயத்தைச்சேர்ந்த சிங்கள மாணவர்கள் குழுவொன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை வலயத்திலுள்ள மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தனர்.
'தெற்கு - கிழக்கு தென்னந்தோப்பு பனந்தோப்புடன் நட்பு வழியில் உறவினராவோம்' என்ற தலைப்பில் இவ்வின நல்லுறவு நிகழ்வு இடம்பெற்றது.
நேற்றுப்பகல் விஜயம்செய்த 40மாணவர்கள் 20ஆசிரியர்கள் கொண்ட ஹம்பாந்தோட்டைக் குழுவினரை சம்மாந்துறை வலயம் சார்பில் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.எ.சபூர்த்தம்பி உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா வலய சமாதான இணைப்பாளர் அச்சிமொகமட் ஆலோசனை வழிகாட்டல் இணைப்பாளர் எ.றஹீம் பாடசாலை அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஹொக்கல்ல மாக வித்தியாலய அதிபர் பி.ஜி.பிரேமரத்ன தலைமையிலான இக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பாடசாலையில் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டன. தமிழ் சிங்கள கலாசார கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாலையில் கலாசார விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இரவு இவர்கள் பாடசாலையிலே தங்கியிருந்து நாளை வீடுதிரும்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.