யூ.கே.காலித்தீன் - சாய்ந்தமருது
கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு நீண்ட காலத் தேவையாக இருந்த மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி வைப்பதற்கு போதியளவு வசதி இன்மையினால் அவதியுறும் மாணவர்களின் நன்மை கருதி ”செஸ்டோ” அமைப்பினால் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கான ஏற்பாடுகளை செய்து பாடசாலை அதிபரிடம் இன்று (10) கையளித்து வைக்கப்பட்டது.
கல்முனை சாஹிராக் கல்லூரியில் 99 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர் அமைப்பான ”செஸ்டோ” ZESDO (Zairians’ Education & Social Development Organization) அமைப்பானது, 2016 நடப்பு ஆண்டுக்கான தலைவர் எஸ்.எம். ஆரீஸ் அக்பர் (இலங்கை மின்சார சபை, மின் அத்தியட்சகர்) தலைமையில் இவ்வருடத்துக்கான முக்கிய வேலைத்திட்டமாக, இனம்காணப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளுக்கு உதவுதல் எனும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் 2வது வேலைத்திட்டமாக கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலய அதிபரின் வேண்டுகோளின் அடிப்படையில் இப்பாடசாலையின் நீண்ட கால தேவையாகயிருந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு கல்லூரியில் அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் "செஸ்டோ" அமைப்பின் நடப்பாண்டு தலைவர் எஸ்.எம். ஆரீஸ் அக்பர், செயலாளர் சதாத், பொருளாளர் இர்ஷாத், அமைப்பின் முன்னாள் தலைவரும் பிராந்திய மின் பொறியியலாளருமான எம்.ஆர்.எம்.பர்ஹான், பாடசாலையின் பி.எஸ்.ஐ. இணைப்பாளர் அன்வர் சித்தீக், அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இவ் அமைப்பானது 2013 ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளைக் கடந்து, நான்காவது வருடத்தில் வெற்றிகரமாக காலடியெடுத்து வைத்துள்ளது. அது மாத்திரமல்லாது கல்வி, சமூக ரீதியான பல்வேறு சேவைகளை பல்வேறு சமூக ரீதியான குறிக்கோள்களை மையமாக கொண்டு தூர நோக்கு சிந்தனையுடன், சமூகத்தின் கல்வி, கலை, கலாசார அபிவிருத்தியில் முடியுமான அளவில் பங்களிப்பு இயங்கிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபரினால் இவ் அமைப்புக்கு நன்றி கூறி நினைவுச்சின்னமும் கையளிக்கப்பட்டது.