நமது உணவு முறைகள் இப்போது மாறி விட்டன. நமது முன்னோர் சாப்பிட்ட பழைய சோறு, வெங்காயம் இணை இன்றளவும் அவர்களை திடகாத்திரமாக வைத்திருக்கிறது.
துரித உணவு சாப்பிட்டு வரும் இன்றைய இளையமுறையினர், 30 வயதிலேயே சர்க்கரை, இதய நோய்களால் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. ஆகவே, பழைய சோறு சாப்பிடுவதை இனி வழக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியம் நம்மை தேடி வரும்.
பழைய சோறு என்றால் கேவலமாக நினைக்கும் நாம், அதிலுள்ள நன்மைகள் குறித்து அறிந்து கொண்டால் இனி பழைய சோறை மிக பெருமையாக காண்பீர்கள்..
பழைய சோற்றில் தான், வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிர, சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கின்றன. இது நமது உணவுப்பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.
இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சிறிய வெங்காயம் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து கட்டுடலுடன் வைத்திருக்கும்.
அதை விட மாரடைப்பை தடுக்கும் சக்தி அதற்கு உள்ளது.
காலை உணவாக பழைய சாதத்தை உண்டால், உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
சோற்றில் இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால், உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவை குணமாகும். அதுவுமில்லாமல் இதில் இருக்கும், நார்ச்சத்து மலச்சிக்கல் இல்லாமல் காலையில் ப்ரீயாக போகலாம்.
சில மாரடைப்பை சந்தித்தவர்களுக்கு கொழுப்பை கரைக்க பழைய சோறு, சின்ன வெங்காயம் சாப்பிடச்சொல்லும் ஆங்கில மருத்துவர்களும் இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து, உடல் எடையும் குறைந்து விடுவதாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நம் முன்னோர்கள் உட்கொண்ட உணவின் நன்மையை கூட அடுத்த நாட்டுக்காரர்கள் நமக்கு சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.
பழையதில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், உடலுக்கு அதிகமான சக்தியை தந்து, உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது.
அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.
அதனால்தான் நம் முன்னோர்கள், ஒரு சட்டியில் பழைய சாதம் வெங்காயம் துணையுடன் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்ய உடலில் தெம்பு இருந்திருக்கிறது .
இதற்கு கைகுத்தல் அரிசி மிக சிறந்தது.
ஆனால் இப்போது கைக்குத்தல் அரிசிக்கு எங்கே போவது. கிராமங்களிலேயே கிடைப்பதில்லை. எல்லாம் எந்திரமயம். சாதாரண அரிசியே அந்த அளவு சக்தி தர போதுமானது. பழையது தயாரிக்க சூடான சமைத்த சாதத்தில் உடனே தண்ணீர் ஊற்றக் கூடாது.
மதியம் நாம் சாப்பிட்டப் பின்னர் ஆறிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி, [மண் சட்டி என்றால் இன்னமும் நலம்] மறுநாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும் மதியம் வரை....