ஹாசிப் யாஸீன்-
துருக்கி நாட்டின் தூதுவர் துன்காசு ஹதார் உள்ளிட்ட துருக்கி வர்த்தக மன்றத்தின் தூதுக் குழுவினரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் இன்று (10) செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லை, வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினர்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உள்ளிட்ட இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் கருத்து தெரிவிக்கையில்,
கல்முனை நகரினை துருக்கி நாட்டு உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கான இணக்கப்பாடு இச்சந்திப்பின் போது எட்டப்பட்டதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
துருக்கி நாட்டின் ஷிநொப் (Sinope Province) மாகாணத்தின் டுவின் சிற்றி (Twin City) நகரத்தின் சகோதர நகரமாக கல்முனை மாநகரினை அபிவிருத்தி செய்வதற்கு உடன்பாடு காணப்பட்டதுடன் இச்சந்தர்ப்பம் மு.கா தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முயற்சியினால் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர அபிவிருத்திக்கு துருக்கி நாடு எதிர்காலத்தில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.